ஹிந்தியில் மட்டும் பதில் சொல்கிறார் ஜடேஜா: ஆஸி., ஊடகத்தினர் குற்றச்சாட்டு
ஹிந்தியில் மட்டும் பதில் சொல்கிறார் ஜடேஜா: ஆஸி., ஊடகத்தினர் குற்றச்சாட்டு
UPDATED : டிச 22, 2024 04:59 PM
ADDED : டிச 22, 2024 04:58 PM

மெல்போர்ன்: ''பத்திரிகையாளர் சந்திப்பில் ஆங்கிலத்தில் பதிலளிக்க மறுப்பு தெரிவித்து ஹிந்தியில் மட்டும் பதில் சொல்கிறார்,'' என ஆஸி., ஊடகத்தினர் குற்றம்சாட்டி உள்ளனர். இதனையடுத்து இரு நாட்டு ஊடகத்தினர் இடையேயான கிரிக்கெட்போட்டி கைவிடப்பட்டது.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ' பார்டர் - கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டி முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது. இரு அணிகள் மோதும், நான்காவது டெஸ்ட், 'பாக்சிங் டே' போட்டியாக டிச.,26ல் துவங்குகிறது. இதற்காக மெல்போர்ன் சென்ற இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு முன்னர், இரு நாட்டு ஊடகத்தினர் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிக்கு ஆஸி., கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்து இருந்தது.
இதற்கு முன்னர், ரவிந்திர ஜடேஜா ஊடகத்தினரை சந்தித்து பேசினார். அப்போது, ஆஸ்திரேலிய ஊடகத்தினர் அவரிடம் கேள்விகளை கேட்டனர். ஜடேஜா ஹிந்தியில் பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்கிலத்தில் பதிலளிக்கும்படி ஆஸி., ஊடகத்தினர் கூறியும், அதனை ஜடேஜா ஏற்கவில்லை. தொடர்ந்து ஹிந்தியிலேயே பதிலளித்ததாக தெரிகிறது.
ஆனால், இதனை மறுத்த இந்திய ஊடகத்தினரின் ஒரு பிரிவினர், இந்த பத்திரிகையாளர் சந்திப்பு இந்திய அணியுடன் சென்றவர்கள் ஏற்பாடு செய்தது. ஹிந்தியில் கேள்வி கேட்டதால், ஜடேஜா ஹிந்தியில் தான் பதில் சொன்னார். ஆங்கிலத்தில் பதிலளிக்க அவர் மறுக்கவில்லை என தெரிவித்தனர்.
இது குறித்த சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, இந்திய ஊடகப்பிரிவினர், ஒருவர் பின் ஒருவராக போட்டியில் இருந்து விலகினர். இதனையடுத்து ஊடகத்தினர் இடையேயான போட்டி கைவிடுவதாக அறிவிக்கப்பட்டது.