பசுமை தேர்தல் நடத்த முடிவு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
பசுமை தேர்தல் நடத்த முடிவு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
ADDED : நவ 15, 2025 11:06 PM
காத்மாண்டு: நேபாளத்தில் வரும் மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அந்நாட்டு தேர்தல் கமிஷன் 'பசுமை தேர்தல்' நடத்தை விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
நம் அண்டை நாடான நேபாளத்தில், இளம் தலைமுறையினரின் போராட்டத்தால் ஏற்பட்ட கலவரத்தையடுத்து, அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகினார்.
இதைத்தொடர்ந்து, இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்கி பதவியேற்றார்.
அங்கு, 2026 மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, அந்நாட்டு தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி, பிரசார நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பேரணிகள், ஊர்வலங்களுக்குப் பின் குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அரசியல் கட்சிகளை தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது.

