ADDED : அக் 10, 2025 11:51 PM
அபுதாபி:ஐக்கிய அரபு எமிரேட்சின் முன்னணி விமான நிறுவனமான 'எத்திஹாட் ஏர்வேஸ்' ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு நேரடி விமான சேவையை அறிவித்துள்ளது.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் ஆட்சி நிர்வாகத்தை தலிபான் பயங்கரவாத அமைப்பு, 2021ல் கைப்பற்றியது. அந்த அரசை உலக நாடுகள் அங்கீகரிக்காமல் உள்ளன. ரஷ்யா உட்பட சில நாடுகள் மட்டுமே தலிபான் நிர்வாகத்தை ஏற்றுள்ளன.
தற்போது உலக நாடுகளுடன் நட்புறவை ஏற்படுத்த தலிபான் நிர்வாகம் முயற்சித்து வருகிறது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசுடன் சமீப ஆண்டுகளில் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியுள்ளது.
அதற்கு சான்றாக, அபுதாபியில் இருந்து காபூலுக்கு நேரடி விமான சேவையை தொடங்க ஐக்கிய அரபு எமிரேடஸ் முடிவு செய்துள்ளது.
அதன்படி எத்திஹாட் ஏர்வேஸ் நிறுவனம் வரும் டிசம்பரில் இருந்து, வாரத்திற்கு மூன்று விமான சேவையை வழங்க உள்ளது.
இது, ஐக்கிய அரபு அமீரகத்திற்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே அதிகரித்து வரும் பயண தேவையை பூர்த்தி செய்யும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
ஏற்கனவே, 'துருக்கி ஏர்லைன்ஸ்' மற்றும் 'பிளைதுபாய்' ஆகியவை காபூலுக்கு நேரடி விமானங்களை இயக்கி வருகின்றன.