ஆப்கனில் மீண்டும் இந்திய துாதரகம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு
ஆப்கனில் மீண்டும் இந்திய துாதரகம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் அறிவிப்பு
ADDED : அக் 10, 2025 11:54 PM

டில்லியில் ஆப்கானிஸ்தான் நாட்டு அமைச்சர் அமீர் கான் முத்தாகியை சந்தித்து பேசிய நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், 'ஆப்கனில் இந்தியத் துாதரகம் மீண்டும் திறக்கப்படும்' என உறுதியளித்தார்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில், 2021ல் தலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, ஆப்கனில் இருந்த இந்தியத் துாதரகம் மூடப்பட்டது. இந்தியாவில் உள்ள அந்த நாட்டின் துாதரகமும் முடங்கியது.
அதற்கு முன் வரை, இந்தியா - ஆப்கன் இடையே சுமுகமான உறவு இருந்தது. இருப்பினும் தலிபான் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்கு பின், வர்த்தகம், மருத்துவ உதவி மற்றும் மனிதாபிமான பணிகளுக்காக, ஆப்கனில் சிறிய அளவிலான துாதரகம் திறக்கப்பட்டது.
இந்நிலையில், ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தாகி, முதன்முறையாக நேற்று முன்தினம் நம் நாட்டிற்கு வந்தார். ஒரு வார பயணத்தில், அமைச்சர்கள், முக்கிய அதிகாரிகளை சந்தித்து பேச அவர் திட்டமிட்டுள்ளார்.
அந்த வகையில், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, அமீர் கான் முத்தாகி நேற்று டில்லியில் சந்தித்து பேசினார். இரு நாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். சந்திப்புக்குப் பின், அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளதாவது:
இந்தியா - ஆப்கன் நாடுகளுக்கு இடையிலான நட்பு, உறவின் புதிய அத்தியாயம் துவங்கி உள்ளது. ஆப்கன் வெளியுறவு அமைச்சரின் பயணம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவை மேலும் வலுப்படுத்தும்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதல் மற்றும் ஆப்கனில் ஏற்பட்ட நிலநடுக்கங்களின் போது, நாங்கள் ஒருவருக்கொருவர் பேச வாய்ப்புகள் கிடைத்தன. ஆப்கனின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்துக்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. அந்நாட்டுனான நெருக்கமான ஒத்துழைப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றில், இந்தியா உறுதுணையாக இருக்கும்.
இரு நாடுகளின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கான பொதுவான அர்ப்பணிப்பு இந்தியாவுக்கு உள்ளது. இருப்பினும், எல்லைத் தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலால் இவை ஆபத்தில் உள்ளன.
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கவலைகள் குறித்த உங்கள் உணர்வு பாராட்டுக்குரியது.
இந்திய நிறுவனங்கள் ஆப்கனில் சுரங்கத் தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்காக தலிபான் அழைப்பு விடுத்துள்ளது வரவேற்கத்தக்கது.
நாங்கள் இப்போது ஆறு புதிய திட்டங்களுக்கு உறுதியளிக்க தயாராக உள்ளோம். அவற்றின் விபரங்களை எங்கள் பேச்சு முடிந்த பின் அறிவிக்க முடியும். ஆப்கனுக்கு நல்லெண்ண அடிப்படையில், 20 ஆம்புலன்ஸ்கள் பரிசாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எம்.ஆர்.ஐ., மற்றும் சி.டி., ஸ்கேன் போன்ற மருத்துவ இயந்திரங்களையும், நோய்த்தடுப்பு மற்றும் புற்றுநோய் மருந்துகளுக்கான தடுப்பூசிகளையும் இந்தியா வழங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தலிபான் ஆட்சியை இந்தியா அதிகாரப்பூர்வமாக இன்னும் அங்கீகரிக்காத நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு பின், காபூலில் இந்திய துாதரகம் செயல்படும் என அறிவித்துள்ளது, தன் செல்வாக்கை இந்தியா அங்கு தக்க வைக்கும் முயற்சியாக உள்ளது என, அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
- நமது சிறப்பு நிருபர் -