sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி

/

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி

9


UPDATED : நவ 09, 2024 02:38 PM

ADDED : நவ 06, 2024 11:54 PM

Google News

UPDATED : நவ 09, 2024 02:38 PM ADDED : நவ 06, 2024 11:54 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, மீண்டும் பதவியேற்க உள்ளார். அதிபர் தேர்தலில், 'பாப்புலர் ஓட்டுகள்' எனப்படும் மக்கள் அளித்த ஓட்டுகள் மற்றும் 'எலக்டோரல் காலேஜ்' எனப்படும் மாகாணங்களின் பிரதிநிதிகள் குழுவின் ஓட்டுகளிலும், அவர் முன்னிலையில் உள்ளார். கடும் போட்டி நிலவும் என்று கருத்துக்கணிப்புகள் கூறிய நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ், 60, இந்தத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

அமெரிக்காவின், 47வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரான, இந்திய வம்சாவளி கமலா ஹாரிஸ் போட்டியிட்டனர்.

தீவிர பிரசாரம்


முன்னதாக, தற்போதைய அதிபர் ஜோ பைடன், அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், வயது மூப்பு, உடல்நிலை மற்றும் டிரம்ப் உடனான விவாத நிகழ்ச்சியில் சொதப்பியது ஆகியவற்றால், ஜனநாயக கட்சியில் அவருக்கு எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

கடந்த சில மாதங்களாக இருவரும், 50 மாகாணங்களிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இந்த பிரசாரத்தின்போது, இரண்டு முறை டிரம்பை கொலை செய்வதற்கான முயற்சிகள் நடந்தன.

மேலும், இருவருக்கும் இடையே நடந்த விவாத நிகழ்ச்சியில், கமலா ஹாரிசின் தடுப்பாட்டத்துடன் கூடிய அதிரடி தாக்குதல் கேள்விகளை சமாளிக்க முடியாமல், டிரம்ப் சற்று திணறினார்.

வயது, அவர் மீதான வழக்குகள், முந்தைய அதிபர் தேர்தலில் தோல்வியை ஏற்க மறுத்தது, அதைத் தொடர்ந்து பார்லிமென்ட் மீது அவருடைய கட்சியினர் நடத்திய தாக்குதல் போன்றவை டிரம்புக்கு எதிராக இருப்பதாக பரவலாக பேசப்பட்டன.

அமெரிக்க ஊடகங்கள், கடந்த சில மாதங்களாக நடத்தி வந்த கருத்துக் கணிப்புகள் அனைத்திலும், டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே கடும் போட்டி நிலவும் என்று கூறப்பட்டன. கமலா ஹாரிசுக்கே அதிக சாதகமான நிலை உள்ளதாகவும் கூறப்பட்டன.

இந்நிலையில், இந்திய நேரப்படி நேற்று காலையில் ஓட்டுப் பதிவு முடிந்ததும், ஓட்டுகள் உடனடியாக எண்ணப்பட்டன. துவக்கத்தில் இருவரும் கிட்டத்தட்ட சமநிலையில் இருந்தனர்.

ஆனால், ஒரு சில மணி நேரத்திலேயே, டிரம்பின் ஆதரவு சரசரவென்று அதிகரித்தது.

உறுதியானது


பாப்புலர் ஓட்டுகள் எனப்படும் மக்கள் அளிக்கும் ஓட்டுகள் மற்றும் அதிபர் தேர்வை உறுதி செய்யும், எலக்டோரல் காலேஜ் எனப்படும் மாகாணங்களின் பிரதிநிதிகள் குழு ஓட்டுகள் எண்ணிக்கை, டிரம்ப் மிகப் பெரிய வெற்றியை பெறுவார் என்பதை உறுதி செய்தன.

இதற்கிடையே, பார்லிமென்ட் மேல்சபையான செனட்டில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் கீழ் சபையான மக்கள் பிரதிநிதிகள் சபைக்கும் இந்தத் தேர்தலின்போது ஓட்டுப் பதிவு நடந்தன.

அவற்றிலும், டிரம்பின் குடியரசு கட்சியே கோலாச்சியது. நீண்ட இடைவெளிக்குப் பின், செனட் சபையில், குடியரசு கட்சி பெரும்பான்மையைப் பிடித்துள்ளது. அதுபோலவே, மக்கள் பிரதிநிதிகள் சபையிலும், அபார

வெற்றியைப் பெற்றது.அமெரிக்க தேர்தல் நடைமுறைகளின்படி, ஓட்டுப் பதிவு, வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் அளிப்பது, எலக்டோரல் காலேஜ் ஓட்டுப் பதிவு, அதிபர் பதவியேற்பு என, அனைத்துக்கும் ஏற்கனவே குறிப்பிட்ட தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, எலக்டோரல் காலேஜ் ஓட்டுப் பதிவு, டிச., 17ல் நடக்க உள்ளது. அதிபர் பதவியேற்பு, 2025, ஜன., 20ல் நடக்க உள்ளது.

அடுத்த அதிபர்


தற்போது, பாப்புலர் ஓட்டு மற்றும் அதன் வாயிலாக கட்சிகளுக்கு கிடைக்க உள்ள, மாகாண பிரதிநிதிகள் எண்ணிக்கை தெரியவந்துள்ளது. எலக்டோரல் காலேஜில், 538 பேர் இருப்பர். இது, பார்லிமென்டின் இரு சபைகளிலும் உள்ள எம்.பி.,க்களின் எண்ணிக்கை அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், 270 பேரின் ஆதரவு பெறுபவரே, அடுத்த அதிபராக முடியும்.

ஏற்கனவே, 270க்கும் மேற்பட்டோரின் ஆதரவு கிடைக்கும் என்பது டிரம்புக்கு உறுதியாகி உள்ளது. அதனால், அவர் அடுத்த அதிபராக தேர்வாவதில் எந்த சிரமமும் இருக்காது. வெறும் நடைமுறை மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும். அதுபோல, பாப்புலர் ஓட்டுகளிலும், கமலா ஹாரிசை விட, டிரம்புக்கு, 50 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.

கருத்துக் கணிப்புகளில், கடும் போட்டி நிலவும் என்று கூறிய நிலையில், அதை பொய்யாக்கி டிரம்ப் அபார வெற்றியை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் தரப்பினர் பெருத்த சோகத்தில் உள்ளனர்.அமெரிக்க வரலாற்றில், தொடர்ச்சியாக இல்லாமல் இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது முறை.இதற்கு முன், 1800களின் இறுதியில் இவ்வாறு நடந்துள்ளது.

அதுபோல, 2004ல் ஜார்ஜ் புஷ், பாப்புலர் ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றார். அவருக்குப் பின், பாப்புலர் ஓட்டுகள் அதிகம் பெற்ற குடியரசு கட்சி வேட்பாளராக டிரம்ப் உள்ளார். கடந்த, 2016 தேர்தலில், எலக்டோரல் காலேஜ் ஓட்டுகள் அதிகம் கிடைத்ததால், டிரம்ப் வென்றார்.

அதிபர் தேர்தலில் வெற்றி உறுதியான நிலையில், தன் ஆதரவாளர்களிடம், டிரம்ப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:நமக்கு எதிரான விமர்சனங்கள் பொய்யானவை என்பதை உறுதி செய்துள்ளோம். இது அமெரிக்காவுக்கு பொற்காலமாகும். என்னுடைய முழு சக்தி, ஆன்மா மற்றும் வீரத்துடன், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக

மாற்றுவேன்.நான் போரை ஏற்படுத்த மாட்டேன்; போர்களை நிறுத்துவேன். நம் வெற்றியை உறுதி செய்த மக்களுக்கு, நன்றிக்கடனை செலுத்துவேன். தற்போது நாடு மீண்டும் மக்கள் கையில் வந்துள்ளது. மிகச்சிறந்த பணி இதுவாகும். உலகின் மிகப் பெரும் பொறுப்பை எனக்கு மக்கள் அளித்துள்ளனர். அதற்கு நன்றியைச் செலுத்துவதில் யாரும் என்னை தடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவின் உத்தர பிரதேசம்!


நம் நாட்டில் லோக்சபா தேர்தலின்போது, உத்தர பிரதேசத்தின் முடிவுகளே, யாருக்கு வெற்றி என்பதை நிர்ணயிக்கும். மொத்தம், 80 தொகுதிகளுடன், நாட்டிலேயே அதிக மக்கள் தொகை, அதிக லோக்சபா தொகுதிகள் உள்ளதால், இந்த மாநிலத்தில் வெற்றி பெறும் கட்சியே, மத்தியில் ஆட்சி அமைக்கும் என்பது நீண்டகாலமாக நம்பப்படுகிறது.

அதுபோலவே, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், அந்த நாட்டிலேயே அதிக மக்கள்தொகை உள்ளது. அதுபோல, அதிகபட்சமாக, 54 எலக்டோரல் காலேஜ் பிரதிநிதிகளை உடையது. ஆனால், இந்த மாகாணம் எப்போதும், ஜனநாயக கட்சிக்கே ஆதரவாக இருந்து வருகிறது. இந்தத் தேர்தலிலும், கமலா ஹாரிசுக்கு ஆதரவாகவே அங்கு அதிக ஓட்டுகள் கிடைத்துள்ளன.

அமெரிக்காவின் உத்தர பிரதேசம் என்று கலிபோர்னியா கூறப்பட்டாலும், இம்முறை வெற்றியை நிர்ணயிக்கக் கூடியதாக அது இல்லை.

டிரம்புடன் பேசிய மோடி


அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்டு டிரம்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'என் நண்பர் டிரம்பின் அமோக வெற்றிக்கு வாழ்த்துகளை தெரிவித்தேன். தொழில்நுட்பம், ராணுவம், எரிசக்தி, விண்வெளி மற்றும் பல துறைகளில் இந்தியா- - அமெரிக்கா உறவுகளை மேலும் வலுப்படுத்த மீண்டும் இணைந்து பணியாற்றுவோம் என தெரிவித்தேன்' என கூறியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து டிரம்ப் கூறுகையில், 'நான் வெற்றி பெற்ற பின், என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்த முதல் உலக தலைவர் மோடி. ஒட்டுமொத்த உலகமும் மோடியை நேசிக்கிறது. இந்தியா ஒரு அற்புதமான நாடு. பிரதமர் மோடி அற்புதமான மனிதர். மோடியும், இந்தியாவும் என் உண்மையான நண்பர்கள்' என்றார்.

மஸ்கிற்கு பாராட்டு


அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு பின் மக்களிடையே உரையாற்றிய டொனால்டு டிரம்ப், டெஸ்லா நிறுவனரும், எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்கை வெகுவாக பாராட்டினார். அப்போது அவர் கூறுகையில், “நமக்கு ஒரு புதிய ஸ்டார் கிடைத்துள்ளார். ஒரு புதிய ஸ்டார் பிறந்துள்ளார். அது வேறு யாரும் இல்லை, நம் எலான் மஸ்க் தான். அவர், எனக்காக பிலடெல்பியா, பென்சில்வேனியா உட்பட பல்வேறு மாகாணங்களில் பிரசாரம் மேற்கொண்டார்,'' என, நினைவுகூர்ந்து பாராட்டு தெரிவித்தார்.

துணை அதிபராகும்இந்திய மருமகன்


Image 1341360


அமெரிக்க துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், 40, வெற்றி பெற்றுள்ளார். இவரின் மனைவி உஷா சிலுகுரி, 38, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர்கள். 1986ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர்.

இதனால், துணை அதிபர் ஜே.டி.வேன்சை இந்தியாவின் மருமகன் என இங்கு உள்ளவர்கள் கொண்டாடுகின்றனர். கலிபோர்னியாவின் சான் டியாகோவில் பிறந்த உஷா, யேல் பல்கலையில் சட்டம் பயின்றார். அங்கு அறிமுகமான ஜே.டி.வேன்சை காதலித்து 2014ல் திருமணம் செய்தார்.

இந்திய வம்சாவளியினர் 6 பேர் வெற்றி


Image 1341359


அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலுடன், பிரதிநிதிகள் சபைக்கு நடந்த தேர்தலில் இந்திய வம்சாவளியினர் ஆறு பேர் வெற்றி பெற்றுள்ளனர். அதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம்,

விர்ஜினியா மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆலோசகராக பணியாற்றியவர்.

இவருடன், ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்களான ஸ்ரீ தனேதர் - மிச்சிகனிலும்; ராஜா கிருஷ்ணமூர்த்தி - இலினாய்ஸ்; ரோ கன்னா - கலிபோர்னியா; அமி பெரா, கலிபோர்னியா; பிரமிளா ஜெயபால் - வாஷிங்டனிலும் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளனர். மேலும் அரிசோனா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமிஷ் ஷா, குடியரசு கட்சி வேட்பாளரை விட சற்றே அதிக ஓட்டுகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Image 1341361


பல நாடுகளில் கிலி!


டிரம்ப்பின் வெற்றி பல நாடுகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சீனாவுக்கு எதிரான மனநிலை உள்ளவர் டிரம்ப். கொரோனா காலத்தில், அதை சீனா தான் பரப்பியது என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். இதைத் தவிர, தொழில், வர்த்தகம் போன்றவற்றிலும், இரு நாடுகளுக்கும் இடையே போட்டி உள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் உடனான, அணு ஒப்பந்தத்தை ரத்து செய்தவர் டிரம்ப். இதைத் தொடர்ந்து, அதன் மீது பொருளாதாரத் தடையையும் விதித்தார். தற்போது, மேற்காசியாவில் போர் நடந்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவான, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் டிரம்ப் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

உலகின் வல்லரசு யார் என்ற போட்டி உள்ளதால், ரஷ்யாவுக்கு எதிரான கொள்கைகளை உடையவர் டிரம்ப். தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், அவருடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் இருந்து தான், அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். அதனால், எல்லையில், மிகப் பெரிய தடுப்புச் சுவரைக் கட்டியவர் டிரம்ப். அதுபோல, பல நாடுகளில் இருந்து அகதிகள் வருவதையும் அவர் விரும்பவில்லை.

உலக தலைவர்கள் வாழ்த்து


* டிரம்பின் வெற்றி வரலாற்றின் மிகச்சிறந்த கம்பேக். அவரின் ஆட்சி இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான நட்புறவை மீண்டும் வலிமையாக்க வழிவகுக்கும்.

- நெதன்யாகு, இஸ்ரேல் பிரதமர்

*டிரம்புடன் நான்கு ஆண்டுகள் இணைந்து பணியாற்றியதைப் போல், மீண்டும் நாங்கள் அவருடன் பணியாற்றுவோம். இரு நாடுகளுக்கும் இடையே அமைதி, வளம் நிறையட்டும்.

-மேக்ரான், பிரான்ஸ் அதிபர்

*டிரம்ப் தலைமையில் வலிமையான அமெரிக்க அரசின் சகாப்தத்தை எதிர்நோக்கி உள்ளோம். உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என நம்புகிறோம்.

- ஜெலன்ஸ்கி, உக்ரைன் அதிபர்

*வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள டிரம்புக்கு வாழ்த்துகள். இருநாடுகளின் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன்.-ஷெபாஸ் ஷெரிப், பாகிஸ்தான் பிரதமர்

*அமெரிக்க அதிபர் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள டிரம்புக்கு வாழ்த்துகள். வருங்காலத்தில் பிரிட்டன் - அமெரிக்கா சிறப்பு உறவு பல துறைகளில் மேம் படும் என நம்புகிறேன்.

- கெய்ர் ஸ்டாமர், பிரிட்டன் பிரதமர்






      Dinamalar
      Follow us