ஈக்வடார் சிறையில் ஏற்பட்ட மோதல்: 31 கைதிகள் உயிரிழப்பு
ஈக்வடார் சிறையில் ஏற்பட்ட மோதல்: 31 கைதிகள் உயிரிழப்பு
ADDED : நவ 11, 2025 06:56 AM
குயட்டோ: ஈக்வடார் சிறையில் கைதிகளின் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 31 பேர் உயிரிழந்தனர்.
தென் அமெரிக்க நாடான ஈக்வடார், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களின் மையமாக திகழ்கிறது. போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் அந்நாட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறைக்குள்ளேயும் போதைப்பொருள் பயன்படுத்துவது, கத்தி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக்கொள்வது என அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், ஓரோ மாகாணத்தில் உள்ள மச்சாலா சிறையில் இரு பிரிவைச் சேர்ந்த கைதிகள் மோதிக் கொண்டனர்.
து ப்பாக்கிச் சூடு நடத்தியும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்கிக் கொண்டனர். இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட கைதிகளில் 27 பேர், அதே நாள் மாலையில் மூச்சுத்தி ணறி இறந்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதிபர் டேனியல் நோபோவா அரசு கட்டியுள்ள புதிய அதிதீவிர பாதுகாப்பு சிறை இம்மாதம் திறக்கப்படவுள்ளது. சில கைதிகளை புதிய சிறைக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே வன்முறை நடந்ததாகக் கூறப்படுகிறது. ஈக்வடார் சிறையில், கடந்த சில ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கைதிகள் இதுபோன்ற மோதல்களில் உயிரிழந்துள்ளனர்.

