கொரோனா தொற்றில் பலரை காத்தவர்; அமெரிக்காவில் இந்திய டாக்டர் சுட்டுக்கொலை!
கொரோனா தொற்றில் பலரை காத்தவர்; அமெரிக்காவில் இந்திய டாக்டர் சுட்டுக்கொலை!
ADDED : ஆக 26, 2024 08:13 AM

வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்த இந்திய டாக்டர் ரமேஷ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர், ஆந்திரா மாநிலம், திருப்பதியை சேர்ந்தவர்.
ஆந்திரா மாநிலம், திருப்பதி மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ரமேஷ் பாபு பெரம்செட்டி. இவர் 1986ம் ஆண்டு விஸ்கான்சின் மருத்துவக் கல்லூரி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். தொடர்ந்து அமெரிக்காவில் டஸ்கலூசா உள்ளிட்ட நான்கு இடங்களில் பணிபுரிந்தார். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். அனைவரும் அமெரிக்காவில் குடியேறி உள்ளனர்.
நன்கொடை
 
அவசர சிகிச்சை மற்றும் குடும்ப மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர். மருத்துவ சிகிச்சையில் 38 வருட அனுபவம் கொண்ட இவர், தான் வசித்த அலபாமா மாகாணத்தில் மிகவும் பிரபலமாக இருந்துள்ளார். தான் படித்த ஆந்திரா மாநிலம், மவுனகுரு பள்ளிக்கு ரூ.14 லட்சத்தை நன்கொடையாக வழங்கியதுடன், தனது கிராமத்தில் கோயில் கட்டுவதற்கும்  நன்கொடை அளித்துள்ளார்.
சுட்டுக் கொலை
 
இந்நிலையில் தான், டஸ்கலூசா நகரில், ரமேஷ் மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச்சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். என்ன சம்பவம், கொலைக்கு யார் காரணம் என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.
அமெரிக்காவில் பல மருத்துவமனைகளில் பணிபுரிந்து புகழ்பெற்றவர் ரமேஷ். கோவிட் காலத்தில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை அளித்து பலரது உயிரை காத்தவர்; இதற்கென அவருக்கு ஏராளமான விருதுகளும் தரப்பட்டுள்ளன. டாக்டர் தொழிலை சிறப்பாக செய்ததால், டஸ்கலூசாவில் உள்ள ஒரு தெருவுக்கு அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

