இந்திய, வங்கதேச சிறைகளில் வாடும் மீனவர்கள் விடுதலை
இந்திய, வங்கதேச சிறைகளில் வாடும் மீனவர்கள் விடுதலை
UPDATED : ஜன 02, 2025 10:00 PM
ADDED : ஜன 02, 2025 09:58 PM

டாக்கா: இந்திய சிறையில் இருந்த வங்கதேச மீனவர்களும், வங்கதேச சிறையில் இருந்த இந்திய மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு அக்., மற்றும் நவ., மாதங்களில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, இந்திய மீனவர்கள் 95 பேர் மற்றும் அவர்களது படகுகளை வங்கதேசம் கைது செய்தது. அவர்கள், பகெர்ஹட் மற்றும் பதுவாகாளி மாவட்டங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
அதேபோல் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடந்த டிச.,9 ல் 78 வங்கதேச மீனவர்களை கைது செய்த இந்திய கடலோர காவல்படையினர், அவர்களின் மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்தனர்.இவர்கள் ஒடிசாவின் பாரதீப் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.
செப்.,12ல் 12 வங்கதேச மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மேற்கு வங்கத்தின் கக்தவீப் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், வங்கதேச சிறைகளில் இருந்த 95 இந்திய மீனவர்களை அந்நாடு விடுவித்துள்ளது. அதேபோல், இந்திய சிறைகளில் இருந்த வங்கதேச மீனவர்களும் விடுவிக்கப்பட்டு உள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் சம்பந்தப்பட்ட நாட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர். இதற்கான பணிகள் வரும் 5ம் தேதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மீன்பிடி படகுகளும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும்.

