ஹிந்து கோயிலில் தாக்குதல்: பயங்கரவாதியை ஜாமினில் விட்டது கனடா போலீஸ்
ஹிந்து கோயிலில் தாக்குதல்: பயங்கரவாதியை ஜாமினில் விட்டது கனடா போலீஸ்
ADDED : நவ 10, 2024 01:34 PM

பிராம்ப்டன்: கனடாவில் கடந்த வாரம் ஹிந்துக் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் காலிஸ்தான் பயங்கரவாதியை போலீசார் கைது செய்து நிபந்தனை ஜாமினில் விடுவித்தனர்.
கனடாவின் பிராம்ப்டன் நகரில் ஹிந்து சபைக்கு சொந்தமான கோயில் உள்ளது. இப்பகுதியில் இந்திய தூதரகம் சார்பில் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. தூதரக அதிகாரிகள் வருகை எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் போராட்டம் நடத்தினர். அப்போது கோயிலில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்களை தங்களின் கொடியை வைத்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனை கண்டித்து ஹிந்துக்கள் போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக அந்நாட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 4 பேரை கைது செய்தனர். அவர்களில் ஒருவன் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இந்தர்ஜீத் கோசால் என்பவனும் ஒருவன். கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதியான ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு வேண்டப்பட்டவன் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 8 ம் தேதி கோசால் கைது செய்யப்பட்டான். ஆயுதங்களால் தாக்கப்பட்டதாக அவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டான். ஒண்டாரியோ நகர நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது அவன் ஆஜர் ஆவான் எனக்கூறியுள்ளனர்.