தவளை இனத்துக்கு ஹாலிவுட் நடிகரின் பெயர்: ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு
தவளை இனத்துக்கு ஹாலிவுட் நடிகரின் பெயர்: ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு
UPDATED : பிப் 17, 2025 10:31 PM
ADDED : பிப் 17, 2025 10:06 PM

குய்டோ: தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தவளை இனத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகரும், டைட்டானிக் பட நாயகனுமான லியோனார்டோ டி காப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அழிந்து வரும் விலங்குகளைப் பாதுகாப்பதில் லியோனார்டோ டி காப்ரியோ தனது ஆதரவைக் காட்டி வருவது வழக்கம். சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 1998ல் லியோனார்டோ டி காப்ரியோ அறக்கட்டளையை நிறுவினார்.
சுற்றுச்சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது பற்றி அடிக்கடி பேசும் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் லியோனார்டோ டி காப்ரியோவின் நினைவாக, தவளைக்கு பிலோனாஸ்டஸ் டிகாப்ரியோ என்று பெயரிடப்பட்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் ஈக்வடாரின் எல் ஓரோ மாகாணத்தில் மேற்கு வனப்பகுதியில் காணப்படுகின்றன.
இந்த தவளையானது மற்ற உயிரினங்களைப் போலல்லாமல், உடலில் கருமையான புள்ளிகள் மற்றும் தனித்துவமான விரல் வடிவம் போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது.
ஈக்வடார் தேசிய பல்லுயிர் நிறுவனம், ஈக்வடார் கத்தோலிக்க பல்கலை மற்றும் சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலை (யு.எஸ்.எப்.க்யூ.,) உள்ளிட்ட பல்கலை ஆராய்ச்சியாளர்கள், இந்த தவளை தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், இந்திய ஆராய்ச்சியாளர் வீரேந்தர் பரத்வாஜ், கோவிட்-19 ஊரடங்கின் போது மேற்கு இமயமலையில் ஒரு பாம்பு இனத்தைக் கண்டறிந்தபோது ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பைச் செய்தார். அதற்கும் டி காப்ரியோவின் பெயரிடப்பட்டது.
'அங்குகுலஸ் டிகாப்ரியோய்' என்று பெயரிடப்பட்ட இந்த பாம்பு இனம் மத்திய நேபாளத்திலிருந்து இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டம் வரையிலான பகுதியில் காணப்படுகிறது.