ஹாங்காங் தீ விபத்தில் 83 பேர் பலி; நடுத்தெருவில் 2,000 குடும்பங்கள்
ஹாங்காங் தீ விபத்தில் 83 பேர் பலி; நடுத்தெருவில் 2,000 குடும்பங்கள்
ADDED : நவ 28, 2025 06:22 AM

ஹங்காங்: ஹாங்காங்கில் அடுக்குமாடி கட்டடங்களில் தீப்பற்றிய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது; 280-க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்னவானது என தெரியாததால் உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், தை போ மாகாணத்தில், 'வாங் புக் கோர்ட்' என்ற மிகப்பெரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. தலா 35 மாடிகளுடன் வரிசையாக எட்டு கட்டடங்கள் அமைந்த இந்த குடியிருப்பு வளாகத்தில் 2,000 வீடுகள் உள்ளன.
இந்நிலையில், கட்டட புதுப்பிக்கும் பணிக்காக கட்டப்பட்ட மூங்கில் சாரங்கள் மற்றும் வலைகளில் நேற்று முன்தினம் திடீரென தீப்பற்றி பயங்கர விபத்து ஏற்பட்டது.
இந்த தீ, அருகில் இருந்த ஏழு கட்டடங்களுக்கும் பரவியதால், அங்கிருந்த மக்கள் அலறியடித்தபடி ஓடினர். உயரமான தளங்களில் வசித்தவர்கள் வெளியேற முடியாமல் சிக்கினர்.
தீ விபத்தில் சிக்கி நேற்று முன்தினம் 36 பேர் உயிரிழந்த நிலையில், மோசமான தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் உயிரிழந்தனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.
இந்த விபத்தில் 280க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்னவானது என தெரியாததால், அவர்களது உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தீக்கிரையான கட்டடங் களில் மாயமானவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
தீ விபத்தை தொடர்ந்து கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 1957ம் ஆண்டு 59 பேரை பலிகொண்ட தீ விபத்துக்கு, பின் நடந்த மிக மோசமான சம்பவமாக இது கருதப்படுகிறது.
தீ விபத்தில், 2,000 வீடுகளும் சேதமடைந்துள்ளன. இதனால், சொந்த வீட்டை விட்டு, அதில் வசித்தோர் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

