பாக்.கை பற்றி இப்போதாவது அமெரிக்கா புரிந்து கொண்டதே : கிருஷ்ணா
பாக்.கை பற்றி இப்போதாவது அமெரிக்கா புரிந்து கொண்டதே : கிருஷ்ணா
UPDATED : செப் 26, 2011 03:47 AM
ADDED : செப் 25, 2011 03:57 PM

நியூயார்க்: பயங்கரவாதிகளுடன் பாக்.
ஐ.எஸ்.ஐ. க்கு தொடர்பு உள்ளது என இப்போதாவது அமெரி்க்கா புரிந்து கொண்டதற்கு இந்தியா வரவேற்றுள்ளது.
ஐ.நா. பொதுச்சபைக்கூட்டம் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பிரதமர் மன்மோகன் கலந்துகொண்டு பேசினார். அவருடன் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவும் சென்றுள்ளார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் புஹானுதீன் ரப்பானி , காபூலில் தலிபான்கள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் பலியானார்.இதற்கு தலிபான்களின் முக்கிய தலைவனான ஹக்கானிக்கு தொடர்புள்ளதாகவும், இவனுக்கு பாக். உளவு அமைப்பான ஐ.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்பு உள்ளதாக அமெரிக்கா பகிரங்கமாக குற்றம்சாட்டியது. ஆனால் இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
இந்நிலையில் நியூயார்க்கில் எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பேட்டியில் கூறியதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் கிடைக்க ஆதரவு தருமாறு சீனாவிடம் வலியுறுத்துவோம். ஆனால் நிபந்தனைகள் எதுவும் விதித்தால் ஏற்றுக்கொள்ளமாட்டோம். பாலஸ்தீன தனிநாடு கோரிக்கை விவகாரத்தில் அமெரிக்க மெத்தனம் காட்டிவருகிறது. மேலும் தலிபான் பயங்கராவாதிகளின் முக்கிய தலைவன் ஹக்கானியின் நடவடிக்கைகள் குறித்தும் ,அவனுக்கு பாக். ஐ.எஸ்.ஐ. அமைப்புடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என ஏற்கனவே அமெரிக்க ராணுவ தலைமை தளபதி மைக்முல்லன் கூறியிருந்தார். ஆனால் பாக். வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி மறுக்கிறார். தற்போது அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் அரசும் ஹக்கானி- ஐ.எஸ்.ஐ. தொடர்பை உறுதி செய்துள்ளது. இதிலிருந்து பயங்கரவாதிகளுடன் பாக். ஐ.எஸ்.ஐ.க்கு தொடர்பு உள்ளது என அமெரிக்கா இப்போதாவது புரிந்துகொண்டுள்ளது. இதனை இந்தியா வரவேற்கிறது. நாளை அமெரி்க்கா வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனை சந்தி்த்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.