தவறான பாதையில் ரஷ்யா... அழுத்தம் கொடுக்க இந்தியாவுக்கு எஸ்தோனியா கோரிக்கை
தவறான பாதையில் ரஷ்யா... அழுத்தம் கொடுக்க இந்தியாவுக்கு எஸ்தோனியா கோரிக்கை
UPDATED : டிச 19, 2025 09:42 AM
ADDED : டிச 18, 2025 11:17 AM

தாலின்: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தவறான பாதையில் செல்வதை இந்தியா எடுத்துச் சொல்ல வேண்டும் எஸ்தோனியா கோரிக்கை விடுத்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போர் 3 ஆண்டுகளைக் கடந்தும் நீடிக்கிறது. இரு நாடுகளும் பரஸ்பரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் நிலப்பரப்பை கைப்பற்றுவதில் ரஷ்ய அதிபர் புடின் பிடிவாதமாக இருந்து வருகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை ஏதும் கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில், உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று ஐரோப்பிய நாடான எஸ்தோனியா வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கஸ் சாக்னா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; நீண்ட காலமாக சுறுசுறுப்பான பொருளாதார உறவுகளைக் கொண்ட ஒரு பெரிய நாடு இந்தியா. இந்தியா ரஷ்யாவின் மீது சில அழுத்தங்களை கொடுக்கலாம். உக்ரைன் மற்றும் ஐரோப்பியாவுக்கு எதிராகவும், ஐநா அரசியல் சாசனங்களுக்கு எதிராகவும் ரஷ்யா செயல்பட்டு வருகிறது. இதனை பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்கள் உலகெங்கும் எடுத்துச் சொல்ல முடியும்.
ரஷ்யா தவறான பாதையில் செல்வதை எடுத்துச் சொல்வதற்கான வாய்ப்புகள் இந்தியாவிடம் அதிகம் உள்ளது. உக்ரைன் - ரஷ்யா போரை நிறுத்துவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்க முடியும், இவ்வாறு அவர் கூறினார்.
ரஷ்யா மற்றும் உக்ரைனை போலவே, எஸ்தோனியாவும், சோவியத் யூனியனில் இடம் பெற்றிருந்த 15 நாடுகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாடு, ஐரோப்பாவின் பால்டிக் கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ளது.

