'ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா பேச்சு நடத்துகிறது'
'ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா பேச்சு நடத்துகிறது'
ADDED : டிச 08, 2024 12:07 AM

தோஹா: “ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரை நிறுத்த, இரு நாட்டு அதிபர்களுடன் வெளிப்படைத்தன்மையுடன் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது,” என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மேற்காசிய நாடான கத்தாருக்கு இரண்டு நாள் பயணமாக நேற்று முன்தினம் சென்றார். கத்தார் பிரதமர் ஷேக் முகமதுவை நேற்று சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சு நடத்தினார்.
இதைத்தொடர்ந்து நடந்த தோஹா மன்றத்தின் 22வது ஆண்டு கூட்டத்தில், 'புதிய சகாப்தத்தில் போர்களுக்கான தீர்வு' என்ற தலைப்பிலான விவாதத்தில் பங்கேற்று ஜெய்சங்கர் பேசியதாவது:
தற்போதைய உலகம் பிரச்னைகள் நிறைந்த, குழப்பமான உலகம். வெளியுறவு சேவையில் உள்ள உலக நாடுகளின் துாதர்கள் இதை தங்களுக்கு தாங்களே சொல்லிக் கொள்ள வேண்டும். நாடுகளுக்கிடையே மோதல்கள் உள்ளன. உலகின் துாதர்கள் அவற்றுக்கு தீர்வு காண வேண்டும்.
கடந்த 1960 மற்றும் 70களில், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அல்லது ஒரு சில மேற்கத்திய சக்திகள் இத்தகைய மோதல்களுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டன. தற்போது அனைத்து நாடுகளும் அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் தற்போது பேச்சு என்ற எதார்த்தத்தை நோக்கி நகர்கிறது. இந்தியா சார்பில் ரஷ்யா சென்று, அதிபர் புடினுடன் பேச்சு நடத்தினோம்.
உக்ரைன் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்தோம். வெளிப்படைத் தன்மையுடன் ஒருவருக்கொருவர் செய்திகளை எடுத்துச் செல்வதன் வாயிலாக இந்தியா பேச்சில் ஈடுபட்டு வருகிறது. சூழ்நிலைகள் சரியாக அமையும்போது போர் நிறுத்தம் ஏற்படும்.
அதுவே உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் உணர்வாக உள்ளது; அதையே இந்தியா வெளிப்படுத்துகிறது. போரினால் இந்த நாடுகள் அனைத்தும் எரிபொருள், உணவு, உரம் ஆகியவற்றின் விலை உயர்வை சந்திக்கின்றன.
அமெரிக்க டாலருக்கு மாற்றாக, 'பிரிக்ஸ்' நாடுகளின் சார்பில் புதிய கரன்சியை அறிமுகம் செய்வது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.