ADDED : ஆக 20, 2025 02:32 AM

லண்டன்:இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர், பிரிட்டனில் 15 வயதில் சட்டப் படிப்பில் சேர்ந்து, 21 வயதில் வழக்கறிஞராக பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், மாயப்பூரில் உள்ள 'இஸ்கான்' எனப்படும் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் வளர்ந்தவர் கிருஷாங்கி மேஷ்ராம், 21. தற்போது மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில் பெற்றோருடன் உள்ளார்.
இவரது குடும்பம் ஆன்மிக பணிக்காக உலகின் பல்வேறு நாடுகளுக்கு செல்கிறது.
இந்நிலையில், இவருக்கு ஐரோப்பிய நாடான பிரிட்டனில் சட்ட கல்வி முடித்து, அங்கு வழக்கறிஞர் ஆக வேண்டும் என ஆசை. அதற்காக பெற்றோரை பிரியவும் மனமில்லை.
இதனால் பிரிட்டனின் திறந்தநிலை பல்கலையில் 15 வயதில் எல்.எல்.பி., எனப்படும் இளநிலை சட்டப்படிப்பில் சேர்ந்தார்.
பொதுவாக பிரிட்டனில் இந்த படிப்பில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் சேர்வர்.
ஆனால், இவர் 18 வயதில் படிப்பை நிறைவு செய்தார். வழக்கறிஞராக பதிவு பெறுவதற்கான தகுதித் தேர்வை எழுதி தற்போது தேர்ச்சி பெற்றார். இதையடுத்து 21 வயதில் வழக்கறிஞராக பதிவு செய்தார். இதன் மூலம் பிரிட்டனில் சமீபத்திய ஆண்டுகளில் பதிவு செய்த மிகவும் இளம் வயது வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.