நியூயார்க்கை தாக்கியது வலுவிழந்த "ஐரீன்' : 40 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின: 9,000 விமானங்கள் ரத்து
நியூயார்க்கை தாக்கியது வலுவிழந்த "ஐரீன்' : 40 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின: 9,000 விமானங்கள் ரத்து
ADDED : ஆக 28, 2011 09:28 PM

நியூயார்க் : அமெரிக்காவின் நியூயார்க் நகரை நேற்று, 'ஐரீன்' சூறாவளி தாக்கியது.
நகரை நெருங்கி வரும்போது அதன் வேகம் மிகவும் குறைந்து விட்டதால் பாதிப்பு பெருமளவு இல்லை என்றாலும், கனத்த மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இச்சூறாவளிக்கு இதுவரை அந்நாட்டில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.
'ஐரீன்' சூறாவளி, வடக்கு கரோலினாவை நேற்று முன்தினம் தாக்கியது. அங்கிருந்து மெல்ல நகர்ந்து, விர்ஜினியா, மேரிலேண்ட், டெலாவேர் மற்றும் நியூஜெர்சியை நேற்று தாக்கியது. வடக்கு கரோலினாவைத் தாக்கும் போதே அதன் நிலை, 3ல் இருந்து 1 ஆக குறைந்திருந்தது. இந்நிலையில், நியூஜெர்சியில் இருந்து, நியூயார்க்கை நோக்கி இச்சூறாவளி நகர்ந்தபோது, தனது வலுவை பெருமளவில் இழந்துவிட்டிருந்தது. நியூயார்க் நகரை, 'ஐரீன்' எட்டிய போது அதன் வேகம் மணிக்கு 106 கி.மீ., ஆக குறைந்திருந்தது. இதனால் 'ஐரீன்' எச்சரிக்கை சூறாவளியில் இருந்து புயலாக குறைக்கப்பட்டது.
வேகம் குறைந்த போதும், அதனால் ஏற்பட்ட மழை அளவு குறையவில்லை. நகரின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்தது. இரு நாட்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டதால், கடற்கரையோர தாழ்வான பகுதிகளில் வசித்த மூன்று லட்சம் பேர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று விட்டனர்.
இதனால், நியூயார்க் நகரம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. அதேநேரம், வெளியேற இயலாதவர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக தங்கியிருக்கும்படி, நகர மேயர் மிக்கேல் ப்ளூம்பெர்க் கேட்டுக் கொண்டார்.
நியூயார்க்கின் முக்கிய விமான நிலையங்கள், பொதுப் போக்குவரத்து நிலையங்கள், பாதாள ரயில் போக்குவரத்து ஆகியவை நேற்று முன்தினமே நிறுத்தப்பட்டன. வடக்கு கரோலினா முதல் பாஸ்டன் நகர் வரையிலான 9,000 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹட்சன் ஆறு மற்றும் துறைமுகப் பகுதியில் கடல் ஆகியவற்றின் நீர்மட்டம் நேற்று எதிர்பார்த்ததை விட மளமளவென அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால், நகரின் பல தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது.
'ஐரீன்' சூறாவளியால், நியூஜெர்சி மாகாணம் பெரும் சேதத்துக்குள்ளாகியுள்ளது. நாட்டின் ஏழு மாகாணங்களிலும் சேர்த்து மொத்தம் 40 லட்சத்திற்கும் அதிகமான வீடுகள், தொழிலகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. தலைநகர் வாஷிங்டனில் மட்டும் 36 ஆயிரம் வீடுகள் மின் துண்டிப்பால் இருளில் மூழ்கியுள்ளன.
பல நகரங்களில் மரங்கள் அடியோடு சாலைகளில் விழுந்து கிடக்கின்றன. மொத்தம், 7,500 தேசியப் பாதுகாப்புப் படையினர், மீட்புப் பணியில் உடனடியாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஐந்து மாகாணங்களில், மரங்கள் விழுந்தது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில், இரு குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர். ஏழு மாகாணங்களிலும் மொத்தம் 150 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.