இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் ஏவுகணை தளங்கள் தரைமட்டம்!
இஸ்ரேல் தாக்குதல்: ஈரான் ஏவுகணை தளங்கள் தரைமட்டம்!
UPDATED : அக் 26, 2024 11:31 PM
ADDED : அக் 26, 2024 11:28 PM

டெஹ்ரான் : ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில், நேற்று 100 ஜெட் விமானங்களை அனுப்பி, ஈரானின் ஏவுகணை தயாரிப்பு தளங்களை குண்டு வீசி தரைமட்டமாக்கியது இஸ்ரேல்.
--காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, கடந்தாண்டு இஸ்ரேலுக்குள் திடீரென புகுந்து, சரமாரியான ராக்கெட் தாக்குதல் நடத்தி 1,000 பேருக்கு மேல், கொன்று குவித்தது. 250 அப்பாவி மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது. பிரஜைகளை மீட்க ஹமாஸ் மீது போர் தொடுத்தது இஸ்ரேல்.
ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஹெஸ்பொல்லா பயங்கரவாத அமைப்பும், அண்டை நாடான லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தி வந்தது.
இரண்டு அமைப்புகளுக்கு நிதியும், ஆயுதங்களும் அளித்து வரும் ஈரான், கடந்த 1ம் தேதி, ஒரே நேரத்தில் 180 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ், ஹெஸ்பொல்லா அமைப்புகளின் தலைவர்களை இஸ்ரேல் கொன்றதற்கான தண்டனை என அந்த தாக்குதலை ஈரான் நியாயப்படுத்தியது.
இதற்கு பழி தீர்க்காமல் விடமாட்டோம் என இஸ்ரேல் கூறியிருந்தது. எனவே, ஈரானின் அணு ஆயுத மையங்கள், எண்ணெய் கிணறுகள் மீது இஸ்ரேல் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தும் என கூறப்பட்டது.
ஆனால் அணு ஆயுத போர் மூள காரணமாகி விடக்கூடாது என்பதால், வேறு வழிகளை இஸ்ரேல் தேடியது. புதிய திட்டப்படி, நேற்று அதிகாலையில் 100க்கு மேற்பட்ட ஜெட் போர் விமானங்களை அனுப்பி, ஈரான் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது.
இந்த விமானங்கள், ஈரான் எல்லைக்குள் 2,000 கி.மீ., பறந்து, தலைநகர் டெஹ்ரான் உட்பட மூன்று நகரங்களில் ஈரானின் ராணுவ கட்டமைப்புகளை குறிவைத்து குண்டுமழை பொழிந்தன. இதில், ஈரானின் ஏவுகணை தளங்கள் தரைமட்டமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், 'இஸ்ரேல் தாக்குதல் பிசுபிசுத்தது. பாதிப்பு ஏதும் இல்லை. எதிர்த்து நின்ற நான்கு வீரர்கள் மட்டுமே உயிரிழந்தனர்' என்று ஈரான் கூறியது.
ஈரான் 'டிவி'யிலும் பெரிதாக செய்திகள் வரவில்லை. சந்தையில் தொழிலாளர்கள் காய்கறியை லாரியில் ஏற்றும் காட்சிகளை ஒளிபரப்பி நிலைமை சீராக இருப்பதாக காட்டினர்.
அலை அலையாக விமானங்களை மூன்று முறை அனுப்பி, குறிப்பிட்ட சில ராணுவ இலக்குகளை மட்டும் குறி வைத்து தாக்கி அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. 'உயிருக்கு சேதம் நேராமல் தாக்குதல் நடத்தினோம். இது, ஈரான் எங்கள் மீது நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி தான். இனியும் ஈரான் வம்பு செய்தால், வேறு ரேஞ்சில் பதிலடி கொடுப்போம்' என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
ஈரானும் விடாப்பிடியாக, 'நாங்கள் கொடுக்கப்போகும் பதிலடி இதுவரை இஸ்ரேல் பார்த்திராத வகையில் இருக்கும்' என கூறியுள்ளது.
இதற்கிடையே, ஈரானின் சிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்பு வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 10 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 'இதுபோன்ற தாக்குதல்களால் யாருக்கும் எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை. சம்பந்தபட்ட நாடுகள் அமைதி காக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.