எகிப்து உடனான எரிவாயு ஒப்பந்தம் இஸ்ரேல் கையெழுத்திட மறுப்பு
எகிப்து உடனான எரிவாயு ஒப்பந்தம் இஸ்ரேல் கையெழுத்திட மறுப்பு
ADDED : நவ 01, 2025 04:46 AM
ஜெருசலேம்: எகிப்துடன், 3.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயு ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட மறுத்ததால், இஸ்ரேலுக்கான தன் பயணத்தை அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் ரத்து செய்துள்ளார்.
வலியுறுத்தல் மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் எகிப்து இடையே, 3.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயு ஒப்பந்தம் குறித்து பேச்சு நடந்து வருகிறது.
இப்பேச்சு இன்னமும் முழுமை அடையாத காரணத்தால், இஸ்ரேல் எரிசக்தி துறை அமைச்சர் எலி கோஹென் ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து உள்ளார்.
இதையடுத்து, இஸ்ரேலுக்கான தன் பயணத்தை அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் கிறிஸ் ரைட் ரத்து செய்துள்ளார்.
இந்த ஏற்றுமதி ஒப்பந்தம் கையெழுத்தானால், உள்நாட்டு எரிவாயு இருப்பு குறைந்து, அதன் விளைவாக இஸ்ரேலில் எரிவாயுவின் விலை உயர்ந்து விடும் என இஸ்ரேல் எரிசக்தி துறை அமைச்சர் அஞ்சுவதாக கூறப்படுகிறது-.
இதன் ஒரு பகுதியாக, ஒப்பந்தம் குறித்து நடந்த பேச்சின்போது, இஸ்ரேலிய மக்களின் நலன்களை பாதுகாக்க, ஏற்றுமதி விலையை போலவே உள்நாட்டு சந்தை விலையையும் நிலையானதாகவும், கட்டுப்படியாகக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்ய அவர் வலியுறுத்திஉள்ளார்.
பயணம் ரத்து இக்கோரிக்கை குறித்து இன்னும் பேச்சு நடந்து வருவதால், இறுதி முடிவு எட்டும் வரை ஒப்பந்தத்தை அங்கீகரிக்க கோஹென் மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிறிஸ் ரைட் தன் இஸ்ரேலிய பயணத்தை ரத்து செய்துள்ளார் என கூறப்படுகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியும், ஸ்திரத்தன்மையும் ஏற்பட இஸ்ரேல் - எகிப்து இடையே இந்த எரிவாயு ஒப்பந்தம் அவசியம் என அமெரிக்கா கருதுகிறது.
மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு பெரிய அமெரிக்க நிறுவனம் நேரடியாக ஈடுபட்டுள்ளதால், அந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய லாபம் கிடைக்கும்.
இது, அமெரிக்க பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு நன்மை பயக்கும் என்பதால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

