ADDED : செப் 16, 2024 01:22 PM

டோக்கியோ: ஜப்பானில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை முதல்முறையாக 3.62 கோடியாக அதிகரித்து புதிய சாதனை படைத்துள்ளது.
ஜப்பானில் பெரும்பாலானோர் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாததால் நாளுக்கு நாள் மக்கள் தொகை குறைந்து கொண்டு போகிறது. இதனை மாற்ற அரசு எவ்வளவோ முயற்சி செய்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. முதியவர்கள் அதிகம் வசிக்கும் நாடாகவும் மாறி வருகிறது.
இந்நிலையில் ஜப்பானின் உள்நாட்டு விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இதுவரை இல்லாத வகையில் இந்தாண்டு, 65 வயதுக்கு மேற்பட்ட ஜப்பானியர்களின் எண்ணிக்கை 3,62,50,000 ஆக அதிகரித்து உள்ளது. இது மொத்த மக்கள் தொகையில் 29.3 சதவீதம் ஆகும்.
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட முதியவர்கள் வசிக்கும் 200 நாடுகளில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது.
இந்த பட்டியலில், இத்தாலி, போர்ச்சுகல், கிரீஸ், பின்லாந்து, ஜெர்மனி மற்றும் குரேஷியா ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. இந்நாடுகளில் வசிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் ஆகும்.
தென் கொரியாவில்19.3 சதவீதம் மற்றும் சீனாவில் 14.7 சதவீதம் முதியவர்கள் வாழ்கின்றனர்.