ADDED : ஜன 23, 2026 02:42 AM
டோக்கியோ: ஜப்பானில் காஷிவசாகி - கரிவா அணுமின் நிலையத்தில், 15 ஆண்டுக்குப் பின் துவங்கிய மின் உற்பத்தி, சில மணி நேரங்களிலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டது.
கிழக்காசிய நாடான ஜப்பானில், 2011ல் ஏற்பட்ட விபத்தை தொடர்ந்து, புகுஷிமா அணு மின்நிலையம் மூடப்பட்டது. பாதுகாப்புக்காக, உலகின் மிகப்பெரிய அணு மின் நிலையமான காஷிவசாகி - கரிவா அணுமின் நிலையமும் மூடப்பட்டது.
இதன் 6வது அணு உலையில், 15 ஆண்டுக்குப் பின் மீண்டும் மின் உற்பத்தி துவங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, அணுமின் நிலையத்தில் நேற்று மின் உற்பத்தி துவக்கப்பட்டது.
ஆனால், அணு உலைகளை பாதுகாப்பாக இயக்குவதற்கு தேவையான கம்பிகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் உற்பத்தி துவங்கிய சில மணி நேரங்களிலேயே நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் கோளாறு சரி செய்யப்பட்டு மின் உற்பத்தி துவங்கும் என அணுமின் நிலையம் தெரிவித்துள்ளது.

