செய்தி கட்டுரைகளை பயன்படுத்திய ஏ.ஐ., ரூ.130 கோடி கேட்டு ஜப்பான் பத்திரிகை வழக்கு
செய்தி கட்டுரைகளை பயன்படுத்திய ஏ.ஐ., ரூ.130 கோடி கேட்டு ஜப்பான் பத்திரிகை வழக்கு
ADDED : ஆக 10, 2025 01:55 AM
டோக்கியோ:ஜப்பானைச் சேர்ந்த பிரபல நாளிதழ் தங்கள் பத்திரிகையில் வெளியான 1.2 லட்சம் கட்டுரைகளை 'பெர்பிளக்ஸிட்டி' என்ற செயற்கை நுண்ணறிவு தளம் அனுமதியின்றி பயன்படுத்தியதற்காக 130 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளது.
இணைய தேடுதல் என்பது மாறி தற்போது செயற்கை நுண்ணறிவு தளங்களிடம் கேள்வி கேட்டு பதில் பெறும் முறைக்கு இணைய பயனர்கள் மாறி வருகின்றனர். இந்த தளங்கள் இணையத்தில் தேடி தகவல்களை அலசி எடுத்து வந்து பதில் அளிக்கின்றன.
இதனால் நேரம் மிச்சம். சரியான முறையில் கேள்வி கேட்டால் தேவையான தகவல் துல்லியமாக கிடைக்கும். இது போன்ற ஒரு செயற்கை நுண்ணறிவு தளம் தான் 'பெர்பிளக்ஸிட்டி'. இது அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக வைத்து செயல்படுகிறது.
அந்த நிறுவனத்தின் மீது, கிழக்கு ஆசிய நாடான ஜப்பானைச் சேர்ந்த, 'யோமியுரி ஷிம்பன்' என்ற நாளிதழ் டோக்கியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதில் கூறியுள்ளதாவது:
ஒரு பத்திரிகை கட்டுரை ஒன்றை உருவாக்க கடும் முயற்சிகளையும், பணத்தையும் செலவு செய்கிறது. அப்படி உருவான 1.2 லட்சம் கட்டுரைகளின் தகவல்களை, 'பெர்பிளக்ஸிட்டி' ஏ.ஐ., தளம் அனுமதியின்றி இலவசமாக எடுத்து பயனர்களுக்கான தன் பதில்களில் வழங்கியுள்ளது.
இது துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும் என்ற இதழியல் பணிக்கு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு இழப்பீடாக 130 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளது.