10 ஆண்டுக்கு முன் மாயமான விமானத்தை தேடும் மலேஷியா
10 ஆண்டுக்கு முன் மாயமான விமானத்தை தேடும் மலேஷியா
ADDED : டிச 04, 2025 01:17 AM

கோலாலம்பூர்: பத்து ஆண்டுகளுக்கு முன் மாயமான மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணி, வரும் 30ல் மீண்டும் துவங்குகிறது.
தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் பீஜிங் நகருக்கு, 2014ல், மலேஷிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின், 'போயிங் 777' ரக விமானம், 239 பேருடன் சென்றது. இதில் பெரும்பாலானோர் சீனர்கள்.
புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேடாரில் இருந்து விமானம் மறைந்தது. வழக்கமான பாதையில் இருந்து விலகி, தெற்கு இந்திய பெருங்கடலில் விபத்துக்கு உள்ளானதாக ரேடார் தகவல்கள் தெரிவித்தன. ஆனால், விமானத்தின் இறக்கைகளை தவிர மற்ற பாகங்கள் இதுவரை கிடைக்கவில்லை.
மாயமான விமானத்தை தேடும் பணியில், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த, 'ஓசன் இன்பினிட்டி' என்ற ரோபோட்டிக் நிறுவனம், 2018-ல் ஈடுபட்டது. ஆனால் கண்டுபிடிக்கவில்லை. தற்போது, அதே நிறுவனம் மலேஷிய விமானத்தை மீண்டும் தேட முன்வந்துள்ளது.
விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்தால் மட்டுமே, 631 கோடி ரூபாய் கட்டணம் வழங்கப்படும் என, மலேஷிய அமைச்சரவை சமீபத்தில் நிபந்தனை விதித்தது.
இதை ஏற்ற ஓசன் இன்பினிட்டி நிறுவனம், வரும் 30 முதல் மீண்டும் தேடுதலை துவங்க உள்ளது.

