அரசியல் பொருளாதார நிபுணர்களுடன் ரஷ்யாவில் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
அரசியல் பொருளாதார நிபுணர்களுடன் ரஷ்யாவில் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு
ADDED : ஆக 21, 2025 01:09 AM
மாஸ்கோ:அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டின் அரசியல், பொருளாதார நிபுணர்களை சந்தித்து, சர்வதேச அரசியல் குறித்து விவாதித்தார்.
ரஷ்யாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மந்துரோவின் அழைப்பின்படி, மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் அந்நாட்டுக்கு சென்றுள்ளார்.
தலைநகர் மாஸ்கோவில் இந்தியா --- ரஷ்யா இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆணையத்தின், 26-வது அமர்வு நேற்று நடந்தது. அதில், இணை தலைவராக அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்றார்.
இந்த அமர்வுக்கு முன் ரஷ்யாவின் முக்கிய அறிஞர்கள் மற்றும் அரசியல், பொருளாதார நிபுணர்களுடனான கூட்டத்தில் பங்கேற்றார்.
இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில், 'ரஷ்ய அறிஞர்கள் மற்றும் அரசியல், பொருளாதார நிபுணர்களுடன் இரு தரப்பு உறவு, சர்வதேச அரசியல் நிலவரம், அதில் இந்தியாவின் கண்ணோட்டம் ஆகியவை குறித்து விவாதித்தேன்' என கூறினார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக நம் நாட்டுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள நிலையில், அமைச்சர் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.