மொரீஷியஸ் பிரதமராகிறார் நவீன் ராம்கூலம்: மோடி வாழ்த்து
மொரீஷியஸ் பிரதமராகிறார் நவீன் ராம்கூலம்: மோடி வாழ்த்து
ADDED : நவ 13, 2024 03:31 AM

ஜோக்கன்ஸ்பர்க்; மொரீஷியசில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், டாக்டர் நவீன் ராம்கூலம், 77, தலைமையிலான எதிர்க்கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
இந்திய பெருங்கடலில் உள்ள சிறிய தீவு நாடு மொரீஷியஸ். இங்கு, மொத்தம் உள்ள 70 உறுப்பினர்களில், 62 பேரை மக்கள் தேர்வு செய்வர்.
இந்நிலையில், அந்நாட்டின் பார்லிமென்ட் தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், உடனே ஓட்டுகள் எண்ணப்பட்டன.
இதில், கடந்த இரண்டு முறை நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற பிரதமர் பிரவீந்த் குமார் ஜுக்நாத் தலைமையிலான ஆயுதப்படை சமூக உடைமை இயக்கம், இம்முறை பெரும்பான்மை இடங்களில் தோல்வியைத் தழுவியது.
பிரதான எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் டாக்டர் நவீன் ராம்கூலம் தலைமையிலான தொழிலாளர் கட்சி - பார்டி டிராவைலிஸ்ட் மற்றும் மொரீஷியசின் ஆயுதப்படை இயக்கம், நோவியாவ் ஜனநாயகம் கட்சியினர் அடங்கிய கூட்டணி, இதுவரை முடிவுகள் வெளியான 60 இடங்களையும் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதன் வாயிலாக, மொரீஷியஸ் நாட்டின் பிரதமராக நவீன் ராம்கூலம் மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார்.
இதையடுத்து, நவீன் ராம்கூலமிற்கு நம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்ததுடன், மொரீஷியஸ் நாட்டுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

