பாக்.,கிற்கு புதிய ஏவுகணையா? இல்லை என்கிறது அமெரிக்கா!
பாக்.,கிற்கு புதிய ஏவுகணையா? இல்லை என்கிறது அமெரிக்கா!
ADDED : அக் 11, 2025 12:02 AM

வாஷிங்டன்:பாகிஸ்தானுக்கு புதிய ஏவுகணைகள் எதுவும் வழங்க ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், அந்த நாட்டின் ராணுவ தளபதி ஆசிம் முனிர் கடந்த மாத இறுதியில் அமெரிக்காவுக்கு சென்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினர். அப்போது, புதிய 'அம்ராம்' எனும் ஏவுகணையை வழங்குவதற்கான ஒப்பந்தத்துக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
இதை, அமெரிக்க வெளியுறவுத் துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது. கடந்த செப்., 30ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த மானது, புதிய ஏவுகணைகளை வழங்கு வதற்கானது அல்ல என்று தெளிவுபடுத்திஉள்ளது.
இது, ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் திருத்தம் என்றும், இந்த ஒப்பந்தத்தின் கீழ், தற்போதுள்ள ஏவுகணை அமைப்பு களுக்கான பராமரிப்பு மற்றும் உதிரி பாகங்கள் வழங்குவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தற்போதைய திறன்களை மேம்படுத்துவதற்காக, புதிய ஏவுகணைகளை வழங்குவது அதில் இடம்பெறவில்லை என மேலும் விளக்கம் அளித்துள்ளது.