நீடா அம்பானி அணிந்திருந்த சேலையை உருவாக்க 1,900 மணிநேரமா? வாயை பிளக்க வைத்த வேலைபாடுகள்
நீடா அம்பானி அணிந்திருந்த சேலையை உருவாக்க 1,900 மணிநேரமா? வாயை பிளக்க வைத்த வேலைபாடுகள்
ADDED : ஜன 22, 2025 09:39 PM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப் கொடுத்த இரவு விருந்தில் கலந்து கொண்ட போது, ரிலையன்ஸ் பவுண்டேசன் தலைவருமான நீடா அம்பானி அணிந்திருந்த சேலை, அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்பையொட்டி, நடந்த தனியார் வரவேற்பு விழாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவியும், ரிலையன்ஸ் பவுண்டேசன் தலைவருமான நீடா அம்பானியும் பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய பாரம்பரியத்தில் ஒன்றான சேலை அணிந்து வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. குறிப்பாக, அவர் அணிந்திருந்த காஞ்சிப்பட்டு சேலையில், காஞ்சிபுரத்தின் பழம்பெருமை வாய்ந்த கோவில்களின் சிறப்பை வெளிக்காட்டும் வகையில், இரு தலைப்பட்சி, மயில், கோபுரங்கள் இடம் பெற்றிருந்தன.
ஸ்வதேஷ் சார்பில் உருவாக்கப்பட்ட இந்த சேலை, தேசிய விருது பெற்ற கலைஞர் கிருஷ்ணமூர்த்தியால் வடிவமைக்கப்பட்டிருந்தது. அவர் அணிந்திருந்த வெல்வெட் ஜாக்கெட், மணீஷ் மல்ஹோத்ராவால் உருவாக்கப்பட்டது.
தற்போது, டிரம்ப் கொடுத்த இரவு விருந்தில் நீடா அம்பானி அணிந்திருந்த சேலையும் அதீத கவனம் பெற்றுள்ளது. காஷ்மீரி பேப்ரிக் முறையில் உருவாகியுள்ள அந்த சேலையை பிரபல ஆடை வடிவமைப்பாளர் தருண் தஹிலானி வடிவமைத்துள்ளார். ஆரி வேலைப்பாடுகள் மற்றும் ப்ரெஞ்ச் நாட்ஸ் டிசைன்களை கொண்டுள்ள இந்த சேலையை உருவாக்க, 1,900 மணிநேரங்கள் ஆகியுள்ளதாம். குறுகிய மாடர்ன் காலர் வைத்த ஜாக்கெட்டில் வைரங்களால் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், அனுபவமிக்க கைவினைக்கலைஞர்களால் நெய்யப்பட்ட இந்த சேலையில் நுணுக்கமாக கை வேலைபாடுகளும், எம்பிராய்டெரி நுட்பங்களும் பயன்படுத்தப்பட்டு செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் இந்த சேலையின் விலை கோடிகளில் இருக்கும் என்று சொன்னால் கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.