அவசர நிலை அறிவித்த தென் கொரிய அதிபரை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் முடிவு
அவசர நிலை அறிவித்த தென் கொரிய அதிபரை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் முடிவு
ADDED : டிச 05, 2024 01:10 AM

சியோல், அவசரநிலை அறிவித்து குழப்பத்தை ஏற்படுத்திய தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் தானாக பதவி விலக வேண்டும். இல்லாவிட்டால், பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை எடுக்கப் போவதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
கிழக்காசிய நாடான தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், நேற்று முன்தினம் திடீரென அவசரநிலை ராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தினார். வடகொரிய கம்யூனிச சக்திகளின் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும், இந்த அவசரநிலையை அறிவிப்பதாக அவர் தெரிவித்தார்.
மக்கள் சாலைகளில் குவிந்தனர். அடுத்தாண்டுக்கான பட்ஜெட் தாக்கலில், அதிபர் இயோலின் மக்கள் சக்தி கட்சிக்கும், பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனால், மசோதாவை தாக்கல் செய்ய முடியாத நிலைக்கு இயோல் தள்ளப்பட்டார். இதையடுத்து, இந்த அதிரடி அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
ஓட்டளிப்பு
இதற்கிடையே, பார்லி மென்ட் அவசரமாகக் கூடியது. அவசரநிலை பிரகடனத்தை விலக்கிக் கொள்ள, 190- - 0 என்ற அடிப்படையில் எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். இதில், அதிபரின் கட்சி எம்.பி.,க்களும் அடங்குவர். அந்த நாட்டின் சட்டத்தின்படி, பார்லிமென்ட் தீர்மானத்தை ஏற்று அதிபர் செயல்பட வேண்டும்.
இதையடுத்து, அவசரநிலை அறிவிப்பு வெளியிடப்பட்ட ஆறு மணி நேரத்துக்குப் பின், அதை விலக்கிக் கொள்ளும் அறிவிப்பை அதிபர் இயோல் நேற்று முன்தினம் இரவு வெளியிட்டார்.
மொத்தம் 300 எம்.பி.,க்கள் உள்ள பார்லி.,யில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பெரும்பான்மையுடன் உள்ளது. தற்போது அந்த கட்சி மற்றும் அதன் ஆதரவு கட்சிகளின் பலம் 192 ஆக உள்ளது.
அவசரநிலை நீக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பை வெளியிட்ட அதிபர் யூன் சுக் இயோலுக்கு எதிராக மக்கள் திரண்டுள்ளனர். எதிர்க்கட்சிகளும், அவர் பதவி விலக வலியுறுத்தியுள்ளன. அவ்வாறு விலகாவிட்டால், பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை தாக்கல் செய்வதாக ஜனநாயக கட்சி நேற்று அறிவித்துள்ளது.
தீர்மானம்
அந்த நாட்டின் சட்டத்தின்படி, பார்லி.,யில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது 200 எம்.பி.,க்கள் ஆதரவு அளித்தால், பதவி நீக்கும் தீர்மானம் நிறைவேறி விடும்.
ஆளுங்கட்சியிலேயே, அதிபருக்கு எதிராக பல எம்.பி.,க்கள் உள்ளனர். அதனால், இந்த தீர்மானம் நிறைவேறுவதில் சிக்கல் இருக்காது என்று கூறப்படுகிறது.
தீர்மானம் நிறைவேறினால், அதிபர் தன் அதிகாரத்தை இழப்பார். பிரதமர் அந்தப் பொறுப்பை ஏற்பார்.