விரக்திக்கு விடை தேடியவரை தற்கொலைக்கு துாண்டிய செயலி நிறுவனம் மீது பெற்றோர் வழக்கு
விரக்திக்கு விடை தேடியவரை தற்கொலைக்கு துாண்டிய செயலி நிறுவனம் மீது பெற்றோர் வழக்கு
ADDED : ஆக 27, 2025 11:07 PM
கலிபோர்னியா:'ஓபன் ஏ.ஐ.,' நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு செயலியான 'சாட்ஜிபிடி' மகனின் தற்கொலை எண்ணத்தை அதிகப்படுத்தி அவன் உயிரிழக்க காரணமாக இருந்ததாக, அமெரிக்காவைச் சேர்ந்த பெற்றோர் அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஆடம் ரெயின், 16. மேல்நிலைப் பள்ளி மாணவரான இவர், கூடைப்பந்து வீரராகவும் இருந்தார்.
குடல் பிரச்னை காரணமாக கூடைப்பந்து அணியில் இருந்து நீக்கப்பட்டார். உடல்நல பிரச்னையால் வீட்டிலிருந்தே பள்ளி படிப்பை தொடர்ந்தார். அப்போது பாடத்தில் எழும் சந்தேகங்களுக்கு ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலியான சாட்ஜிபிடியை பயன்படுத்த துவங்கினார்.
அனைத்து கேள்விகளுக்கும் மனிதரை போலவே பதில் தந்ததால், தன் தனிப்பட்ட விஷயங்களையும் அதனுடன் பகிர்ந்து, மாணவர் ஆடம் கருத்து கேட்க துவங்கி உள்ளார்.
பதின் பருவ குழப்ப மனநிலை, பள்ளி மற்றும் வீட்டில் சந்திக்கும் பிரச்னைகள், பெற்றோர் மற்றும் உடன்பிறந்தவர்களின் புறக்கணிப்பு ஆகியவற்றை கூறி சாட்ஜிபிடியிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
அப்போது, தற்கொலை செய்வது குறித்தும் அவர் கேட்டதற்கு, அது சரியான முடிவு என்று செயலி பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த மாணவர் தற்கொலை செய்துள்ளார்.
மகன் இறப்பதற்கு காரணமான செயலி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.