துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்; ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதம்
துருக்கியில் பயங்கர நிலநடுக்கம்; ஏராளமான கட்டடங்கள் இடிந்து சேதம்
ADDED : ஆக 11, 2025 09:21 AM

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால், ஏராளமான கட்டங்கள் இடிந்து விழுந்தன. இதில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
இஸ்தான்புல்லில் இருந்து தெற்கு பகுதியில் சுமார் 200 கிமி தொலைவில் இந்த நில அதிர்வானது உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1ஆக பதிவாகியுள்ளது. வடமேற்கு பலகேசிர் மாகாணத்தில் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது சுமார் 15க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. தற்போது வரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 29 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு 7.8 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் 53,000 பேரும், வடக்கு சிரியாவில் 6000 பேரும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.