ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1.77 லட்சம் ரூபாய் வரியால் வருவாய் கிடைத்ததாக அதிபர் பெருமிதம்
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 1.77 லட்சம் ரூபாய் வரியால் வருவாய் கிடைத்ததாக அதிபர் பெருமிதம்
ADDED : நவ 11, 2025 06:55 AM

வாஷிங்டன்: உலக நாடுகளிடம் இருந்து வசூலிக்கப்படும் இறக் குமதி வரி வருவாய் அதிகரித்துள்ளதாக பெருமையுடன் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதில் இருந்து அமெரிக்கர் ஒவ்வொருவருக்கும், 1.77 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
எதிர்ப்பு அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக, இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றது முதல், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி விதித்து, பல்வேறு நாடுகளை அலற வைத்து வருகிறார்.
இவ்வரிவிதிப்புக்கு இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் தப்பவில்லை.
இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது அதிக வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து,
எதி ர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 12 அமெரிக்க மாகாணங்களின் கூட்டமைப்பு மற்றும் தங்கள் வணிகத்தில் பெரும் பொருளாதார பாதிப்பு ஏற்படுவதாக கூறி, பல சிறு வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை, அந்த நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கு குறித்த விசாரணை சமீபத்தில் நடந்தது. இந்த விசாரணையின் போது, டிரம்ப் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் கூறுகையில், சர்வதேச அவசரகால பொருளாதார சட்டத்தின் கீழ், இந்த வரிகளை விதித்திருப்பதாகவும், தேசிய அவசர காலங்களில் வணிகத்தை ஒழுங்குபடுத்த அதிபருக்கு இந்த சட்ட அதிகாரம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சுங்க வரி இச்சட்டத்தில் சுங்க வரி என்ற வார்த்தையே குறிப்பி டப்படவில்லை என்றும், அமெரிக்க அரசியலமைப்பின் படி, வரிகளை விதிக்கும் அதிகாரம் பார்லிமென்டுக்கே உள்ளது என்றும், சுங்க வரி ஒரு வகையான வரி என்பதால், அதிபர் தன் அதிகாரத்தை மீறிவிட்டார் என்றும் எதிர்தரப்பினர் வாதிட்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இவ்வளவு பெரிய அளவிலான வரிகளை விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு சட்டம் வழங்குகிறதா என்பதில் சந்தேகம் உள்ளதாகவும், வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவது என்பது சுங்க வரியை விதிக்கும் அதிகாரம் அல்ல என்றும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், அதிபர் டொனால்டு டிரம்ப், சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:
அமெரிக்கா விதித்த வரிகளை எதிர்ப்பவர்கள் முட்டாள்கள். இந்த வரி விதிப்பின் காரணமாக அமெரிக்கா உலகின் பணக்கார மற்றும் மிகவும் மதிக்கப்படும் நாடாக மாறியுள்ளது.
ப ணவீக்கம் குறைந்துள்ளது; பங்குச்சந்தை உச்சத்தில் உள்ளது. அமெரிக்காவில் தற்போது முதலீடுகள் சாதனை அளவை எட்டியுள்ளன. அனைத்து இடங்களிலும் முதலீடுகள், ஆலைகள், தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த வரி விதிப்பு களால், நாட்டில் பணம் கொட்டுகிறது. நாட்டின் கடன் பெருமளவு அடைக்கப்பட்டு விட்டது. அதனால், அதிக வருமானம் ஈட்டுவோரைத் தவிர்த்து, மற்ற அனைத்து அமெரிக்கர்களுக்கும், தலா, 2,000 டாலர், அதாவது, 1.77 லட்சம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் விரைவில் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

