ADDED : ஆக 27, 2025 02:41 AM
மாஸ்கோ:திறன் பெற்ற இந்திய பணியாளர்களை அதிகளவில் பணியமர்த்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாக, அந்நாட்டுக்கான இந்திய துாதர் வினய் குமார் கூறினார்.
அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகள் தங்களின் குடியேற்ற கொள்கையை கடுமையாக்கி வருகின்றன. இதனால், திறன் பெற்ற நம் தொழிலாளர்கள் வேறு நாடுகளை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.
இந்நிலையில், இந்திய பணியாளர்களை அதிகளவில் பணியமர்த்த ரஷ்யா திட்டமிட்டு உள்ளதாக, அந்நாட்டுக்கான இந்திய துாதர் வினய் குமார் கூறினார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
ரஷ்யாவில் இந்தியர்கள் கட்டுமானம் மற்றும் ஜவுளி துறையில் அதிக அளவில் பணிபுரிகின்றனர். தற்போது கனரக இயந்திரங்கள் மற்றும் மின்னணு போன்ற உயர் திறன் தேவைப்படும் துறைகளில், இந்திய பணியாளர்களை வேலைக்கு எடுப்பதில் அந்நாட்டு நிறுவனங்கள் ஆர்வமுடன் உள்ளன. ரஷ்யாவில் பணியாளர்கள் தேவை அதிகம் உள்ளது. நம்மிடம் திறன் பெற்ற பணியாளர்கள் அதிகம் உள்ளனர்.
மேலும், இந்திய சுற்றுலா பயணியர், மாணவர்கள் ரஷ்யாவில் சிரமமின்றி பணப் பரிவர்த்தனை செய்ய, அதை எளிமைப்படுத்தும் பணியில் இரு நாடுகளும் ஈடுபட்டுள்ளன. இதற்காக, இரு நாட்டு வங்கி மற்றும் நிதி குழுவினர் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த குழு, பணப் பரிவர்த்தனை நடந்தால், அது குறித்த தகவலை மொபைல் எண்ணுக்கு அனுப்புவது மற்றும் பணப் பரிவர்த்தனை வழிமுறைகள் போன்ற தொழில்நுட்ப அம்சங்களை விவாதித்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.