பதவிநீக்க தீர்மானம் தோல்வி தென் கொரிய அதிபர் தப்பினார்
பதவிநீக்க தீர்மானம் தோல்வி தென் கொரிய அதிபர் தப்பினார்
ADDED : டிச 08, 2024 12:22 AM

சியோல்: அவசரநிலை அறிவித்த தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம், பார்லிமென்டில் தோல்வி அடைந்தது. இதையடுத்து, அவர் பதவிநீக்கம் செய்யப்படுவதில் இருந்து தப்பினார்.
கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில், பட்ஜெட் மசோதா தொடர்பாக ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்நாட்டின் அதிபர் யூன் சுக் இயோல், அவசரநிலை ராணுவ சட்டத்தை சமீபத்தில் அமல்படுத்தினார். இதற்கு, எதிர்க்கட்சிகளும், ஆளும் கட்சியில் சில எம்.பி.,க்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பார்லிமென்ட் உடனடியாக கூடி, அவசரநிலையை நீக்க தீர்மானம் நிறைவேற்றியது. இதனால், சில மணி நேரங்களில், அவசரநிலை அறிவிப்பை அதிபர் இயோல் திரும்பப் பெற்றார்.
இதற்கிடையே, அதிபருக்கு எதிராகவும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் நாட்டின் பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளும், அதிபரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்தை பார்லிமென்டில் தாக்கல் செய்தன.
அதிபருக்கு எதிராக ஆளுங்கட்சியிலேயே பலர் இருப்பதால், அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், அதிபரை பதவி நீக்கும் தீர்மானத்தின் மீது நேற்று ஓட்டெடுப்பு நடந்தது. பார்லிமென்டில் உள்ள, 300 எம்.பி.,க்களில், 200 பேரின் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே தீர்மானம் நிறைவேறும்.
எதிர்க்கட்சிகளின் சார்பில், 192 பேர் ஓட்டெடுப்பில் நேற்று பங்கேற்றனர். ஆளும் கட்சியில் மூன்று பேர் மட்டுமே பங்கேற்ற நிலையில், மற்றவர்கள் புறக்கணித்தனர். இதனால், ஓட்டுகள் எண்ணப்படாமல், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
தீர்மானம் நிறைவேறுவதற்கு தேவையான 200 என்ற எண்ணிக்கையை எட்டமுடியவில்லை.
இதனால், பதவி நீக்கும் தீர்மானம் தோல்வியில் முடிந்தது. இது, அதிபர் இயோலுக்கு நிம்மதியை அளித்துள்ளது. இருப்பினும், மக்கள் போராட்டம் தீவிரமடையும் என்றும், அரசியல் குழப்பங்கள் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.