ADDED : செப் 22, 2024 01:21 AM

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தல் எவ்வித வன்முறையே, மோதல்களோ இல்லாமல் அமைதியாக முடிந்தது. இந்தத் தேர்தலில், 75 சதவீத ஓட்டுகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடந்தது. கடந்த, 1982க்குப் பின், மிகவும் அதிகபட்சமாக, 38 பேர் இதில் போட்டியிட்டனர்.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 75, சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கும், தேசிய மக்கள் சக்தி கட்சியின் குமார திசநாயகே, 56, மற்றும் சமாகி ஜன பலவேகயாவின் சஜித் பிரேமதாசா, 57, இடையே மும்முனை போட்டி நிலவியது.
மொத்தம், 1.7 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றிருந்தனர். இதற்காக, 13,400 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
பலத்த பாதுகாப்புக்கு இடையே, 28 தேர்தல் மாவட்டங்களில் விறுவிறுப்பான ஓட்டுப் பதிவு நடந்தது. நேற்று மாலை 4:00 மணியுடன் ஓட்டுப் பதிவு முடிந்தது.
இதில், 75 சதவீதம் பேர் ஓட்டளித்ததாக, அந்த நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. நேற்று மாலையே ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
கடந்த, 2022ல் நாடு பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியது.
இதையடுத்து அதிபரான ரணில் விக்ரமசிங்கே, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தன் முயற்சிகளால், மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த தேர்தலில் இலங்கைத் தமிழர் பிரச்னை ஒரு முக்கிய பிரச்னையாக முன் வைக்கப்படவில்லை. நாட்டின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளையே முக்கிய கட்சிகள் முன் வைத்தன.
இலங்கை அதிபர் தேர்தல், விருப்ப ஓட்டு அடிப்படையில் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வு செய்யலாம்.
இதில், 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.
எந்த வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் ஓட்டு பெறாத நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது தேர்வு தொடர்பாக, ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு, அதனடிப்படையில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார்.
இலங்கை அதிபர் தேர்தல் இதுவரை, இரண்டாம் கட்டத்துக்கு சென்ற தில்லை. தற்போதைய தேர்தலில், 38 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் ஓட்டுகள் சிதறி, இரண்டாம் கட்டத்துக்கு செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது.