ADDED : மே 02, 2025 07:00 AM

வெலிங்டன் : நியூசிலாந்தில் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புயல்காற்று வீசுவதால் வெலிங்டனில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பசிபிக் கடல் நாடான நியூசிலாந்து வடக்கு தீவு மற்றும் தெற்கு தீவு என இரு பகுதிகளை உள்ளடக்கியது. இந்த நாட்டின் தெற்கு பகுதியில் நேற்று கனமழை பெய்ததால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர். அவர்களை மீட்புப்படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பினர்.
கிறிஸ்ட் சர்ச் நகரில் பெய்த கனமழையை தொடர்ந்து அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு தீவுகளின் சில பகுதிகளிலும் கடுமையான மழை மற்றும் கடலில் பேரலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வெலிங்டனில் பயங்கர புயல் காற்று வீசியதால் கடும் சேதம் ஏற்பட்டது. மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் வீசிய இந்த புயலால் பெரும் ஆபத்து ஏற்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும், பயணங்களை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து வெலிங்டனில் இருந்து புறப்படும் மற்றும் வரும் விமானங்களின் சேவைகள் நேற்று ரத்து செய்யப்பட்டன. படகு சேவையும் இன்று வரை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டது. புயல் காரணமாக மரங்கள் மின்கம்பங்கள் விழுந்ததால் மின்சாரம் தடைபட்டது.