ஐ.நா., தலிபான்கள் பட்டியலில் 14 பயங்கரவாதிகள் பெயர் நீக்கம்
ஐ.நா., தலிபான்கள் பட்டியலில் 14 பயங்கரவாதிகள் பெயர் நீக்கம்
ADDED : ஜூலை 17, 2011 01:16 AM
ஐ.நா.
: ஆப்கன் அரசு மற்றும் அந்நாட்டு அமைதி கவுன்சில் விடுத்த வேண்டுகோளை ஏற்று, தலிபான் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து 14 பேரின் பெயரை ஐ.நா., நீக்கம் செய்தது. ஆப்கனில் அமைதி ஏற்படுத்தும் விதமாக, தலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை தேசிய நீரோட்டத்திற்குள் கொண்டு வர, அமைதி கவுன்சில் ஒன்றை, ஆப்கன் அதிபர் ஹமித் கர்சாய் நியமித்தார். இக்கவுன்சில், தலிபான் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இதுவரை 1,500க்கும் மேற்பட்டோரை தேசிய நீரோட்டத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில், ஐ.நா.,வின் தலிபான் பயங்கரவாதிகள் பட்டியலில் இருந்து 14 பேரை நீக்கம் செய்ய, ஆப்கன் அரசும், அமைதி கவுன்சிலும், ஐ.நா.,வை கேட்டுக் கொண்டன. தலிபான் உயர்கல்விக்கான முன்னாள் துணை அமைச்சர் அர்சலா ரஹ்மான், சவுதி அரேபியாவுக்கான தலிபான் முன்னாள் தூதர் ஹபிபுல்லா பாசி, தலிபான் முன்னாள் துணை அமைச்சர் பகிர் முகம்மது கான் உள்பட 14 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இவர்களில் நான்கு பேர், அதிபர் கர்சாயின் அமைதிக் கவுன்சில் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தவிர, இன்னும் ஐ.நா., பட்டியலில், 123 தலிபான் பயங்கரவாதிகளின் பெயர் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து ஜெர்மனி நாட்டு தூதர் பீட்டர் விட்டிக் கூறுகையில், 'ஆப்கனில் அமைதி நிலவ, தலிபான்களிடம் பேச்சு நடத்தி, அவர்களை தேசிய நீரோட்டத்திற்கு கொண்டு வரும் அந்நாட்டு அரசின் முயற்சிக்கு, ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சில் மற்றும் சர்வதேச சமுதாயம் ஆதரவளிக்கும்' என்றார்.