திபெத்தின் 60ம் ஆண்டு விழா சீன அதிபர் வருகையால் களைகட்டியது
திபெத்தின் 60ம் ஆண்டு விழா சீன அதிபர் வருகையால் களைகட்டியது
ADDED : ஆக 22, 2025 12:35 AM

லாசா:சீனாவின் தன்னாட்சி பிரதேசமான திபெத் உருவானதன் 60ம் ஆண்டு விழாவில் நேற்று அந்நாட்டின் அதிபர் ஷீ ஜின்பிங் பங்கேற்றார்.
நம் அண்டை நாடான சீனா 1950ல் திபெத்தை தன் நாட்டுடன் இணைத்தது. 1965ல் அதை தன்னாட்சி பெற்ற பிரதேசமாக அதிகாரப்பூர்வமாக நிறுவியது. இதை சீனா, 'ஷிசாங்' என்று அழைக்கிறது. அது நிறுவப்பட்டதன் 60ம் ஆண்டு விழா நேற்று திபெத் தலைநகர் லாசாவில் விமரிசையாக நடந்தது.
இதில் சீன அதிபர் ஷீ ஜின்பிங் பங்கேற்றார். கடந்த 2012ல் அதிபரான பின் இரண்டாவது முறையாக அவர் நேற்று திபெத் வந்தார். இதன் மூலம் இந்த பகுதிக்கு இரண்டு முறை வந்த ஒரே சீன அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
லாசாவின் போடாலா அரண்மனை சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் 20,000க்கும் மேற்பட்ட பொது மக்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். திபெத் பாரம்பரிய முறைப்படி அதிபர் ஜின்பிங்கிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த போடாலா அரண்மனை, திபெத் ஆன்மிக தலைவர்களான தலாய் லாமாக்களின் குளிர்கால இல்லமாகும். இவர்கள் திபெத்தின் அரசியல் மற்றும் மத அதிகாரத்தின் தலைமையாக பல நுாற்றாண்டுகளாக இருந்தனர்.
தற்போதைய தலாய் லாமாவுக்கும், சீன அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் பெரிய குழுவுடன் 1959ல், நம் நாட்டின் ஹிமாச்சல பிரதேசத்தின் தர்மசலாவுக்கு தப்பி வந்து வசிக்கிறார். இவர் சமீபத்தில் தன் 90வது பிறந்த நாளை கொண்டாடினார்.
அப்போது அடுத்த தலாய் லாமாவை தானே தேர்வு செய்வேன் என்று அறிவித்தார். அதை சீனா நிராகரித்தது. அதன் ஒப்புதல் இல்லாதவர் தலாய் லாமா ஆக முடியாது என்றது.
இந்நிலையில், அதிபர் ஜின்பிங்கின் திபெத் வருகை, அப்பிராந்தியத்தில் சீனாவின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்துவதையும், தலாய் லாமா தொடர்பான விஷயத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தை வலியுறுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.