ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா டிரம்ப் நண்பர்?
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா டிரம்ப் நண்பர்?
ADDED : பிப் 18, 2025 08:44 AM

வாஷிங்டன்: ரஷ்யா - உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், தனது நண்பரும், தொழிலதிபருமான ஸ்டீவ் விட்காப்பை நியமித்துள்ளார். இவர், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போரை நிறுத்துவதற்கு முக்கிய பங்காற்றியவர் ஆவார்.
கடந்த சில ஆண்டுகளாக நடந்து வரும் ரஷ்யா - உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார். போரை நிறுத்தும்படி ரஷ்ய அதிபர் புடினை வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக இரு தலைவர்களும் சமீபத்தில் தொலைபேசியில் பேசியிருந்தனர்.
இந்நிலையில், போரை நிறுத்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் ரூபியோ ஈடுபடுத்தப்படுவார் என பல நாட்டு தலைவர்களும் நினைத்தனர். ஆனால், அதனை பொய்யாக்கும் வகையில், தனது நண்பரான ஸ்டீவ் விட்காப்பை டிரம்ப் நியமித்து உள்ளார்.
இது பல நாட்டு தலைவர்களை ஆச்சர்யப்படுத்தி உள்ளது. டிரம்ப் பதவியேற்றதும், இவரை மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்க தூதராக நியமித்தார்.
யார் இவர்
தற்போது 67 வயதாகும் ஸ்டீவ் விட்காப்,நியூயார்க்கின் லாங் தீவில் பிறந்து வளர்ந்தவர். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு உள்ளார். டிரம்ப்பிற்கு நெருங்கிய நண்பராக திகழும் இவர், குடியரசு கட்சிக்கு நன்கொடை அளிக்கும் நபர்களில் முக்கியமானவர்.
நியூயார்க் மற்றும் புளோரிடாவில் இவரது ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யம் விரிவடைந்துள்ளது. டிரம்ப்பிற்கு ஆதரவாக பல மேடைகளில் ஏறி உள்ளார். அதிபர் வேட்பாளருக்காக குடியரசு கட்சியில் நடந்த தேர்தலில் டிரம்ப்புக்காக பலரின் ஆதரவு கிடைக்க வகை செய்தவர்.
இவர், மியாமி வணிக பல்கலை, ரியல் எஸ்டேட் ஆலோசனை வாரிய தலைவராக உள்ளார். கலைக்கான ஜான் எப்.கென்னடி அறக்கட்டளை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். அப்போது, இந்த பதவியை டிரம்ப் ஸ்டீவ் விட்காப்பிற்கு வழங்கியிருந்தார்.
சாதனை
இவர் எந்த பதவியில் இல்லாத போதும், இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட அமெரிக்க அரசு சார்பில் முக்கிய பங்காற்றினார். இவரது சாதனையை தான் ஜோ பைடனும், டிரம்பும் உரிமை கொண்டாடி வருகிறார்.
அப்போது, இவர் டெல் அவிவ் நகருக்கு சென்று இஸ்ரேல் பிரதமர் நெதன் யாஹூவை சந்தித்து பேசினார். இதன் காரணமாக கத்தாரில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட காரணமாக அமைந்தது. இவரின் பணியை அப்போது, அமெரிக்க அதிபரின் தூதர், ஸ்டீவ் விட்காப்பை வெகுவாக பாராட்டி இருந்தார்.
தற்போது இவர் மீண்டும் சவுதி அரேபியாவிற்கு திரும்பி உள்ளார். இந்த முறை ரஷ்யா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவததே இவரின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்த கூட்டத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஜ் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.
கவலை
டிரம்ப் எடுத்து வரும் சில அதிரடி நடவடிக்கைகள், மேற்கத்திய நாடுகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. சவுதி அரேபியாவில் நடக்கும் கூட்டத்திற்கு உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் அழைக்கப்படவில்லை. இதனால், உலக நாடுகளின் அதிகார வரிசையில் மாற்றம் ஏற்படுமா என்ற அச்சத்தில் அந்த நாடுகள் ஆழ்ந்துள்ளன.

