பாகிஸ்தானுக்கான வரியை குறைத்த டிரம்ப்; 29 சதவீதமாக இருந்ததை 19 ஆக மாற்றினார்
பாகிஸ்தானுக்கான வரியை குறைத்த டிரம்ப்; 29 சதவீதமாக இருந்ததை 19 ஆக மாற்றினார்
ADDED : ஆக 02, 2025 01:36 AM

வாஷிங்டன்: பாகிஸ்தானின் இறக்குமதி பொருட்களுக்கான வரியை 29 சதவீதமாக நிர்ணயித்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து வரியை 19 சதவீதமாக குறைத்து நேற்று உத்தரவிட்டார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தன் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும், அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் எந்த அளவு வரி விதிக்கிறதோ, அதே அளவு பரஸ்பர வரி கொள்கையை அமல்படுத்தினார்.
இந்த கொள்கையின்படி அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்யும் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் கடந்த ஏப்ரலில் புதிய வரி விகிதங்களை வெளியிட்டார். இதில் இந்தியாவுக்கு 26 சதவீதமும், பாகிஸ்தானுக்கு 29 சதவீதமும் வரி விதிக்கப்பட்டது.
அதன் பின், வரி குறைப்புக்காக பேச்சு நடத்தும் வகையில் புதிய வரிகளை 90 நாட்களுக்கு நிறுத்தி உத்தரவிட்டார். இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையொட்டி, திருத்தப்பட்ட வரி பட்டியலை அதிபர் டிரம்ப் வெளியிட்டு வருகிறார்.
அதில், நேற்று முன்தினம் இந்தியாவுக்கான வரி 25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கான திருத்தப்பட்ட வரிகளுக்கான உத்தரவில் அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.
பாகிஸ்தான் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சை வெற்றிகரமாக முடித்ததால், பாகிஸ்தானுக்கான வரி 29 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வரி வரும் 7ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து அதிபர் டிரம்ப்பின் அறிக்கை:
பாகிஸ்தான் உடன் ஒரு ஒப்பந்தத்தை முடித்துள்ளோம். இதன்படி, அமெரிக்காவுடன் இணைந்து தங்கள் நாட்டின் பெரிய அளவிலான எண்ணெய் இருப்புகளை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் ஒத்துழைக்கும்.
இது ஒரு கூட்டு முயற்சி. யார் கண்டது, ஒருவேளை பாகிஸ்தான் வரும் காலங்களில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விற்கலாம். இவ்வாறு அறிக்கையில் கூறினார்.