அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் மீண்டும் வெடித்தது 100% வரி விதித்தார் டிரம்ப்
அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போர் மீண்டும் வெடித்தது 100% வரி விதித்தார் டிரம்ப்
ADDED : அக் 11, 2025 11:25 PM

வாஷிங்டன்:வரும் நவ., 1 முதல் அனைத்து சீனப் பொருட்களுக்கும் 100 சதவீத வரி விதிக்கப்படுவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தன் அடுத்த அதிரடியை துவக்கியுள்ளார்.
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டிரம்ப் பதவியேற்றுக் கொண்டதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, தங்கள் நாட்டு பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்துக்கும் வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் வரிகளை விதித்து அதிர்ச்சி அளித்தார்.
இதன் ஒரு பகுதியாக, நம் அண்டை நாடான சீனாவுக்கும் வரிகளை விதித்தார். இதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, 145 சதவீத வரியை அறிவித்தார். இதற்கு பதிலடியாக சீனா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, 125 சதவீத வரியை விதித்தது. இதனால், இரு நாடுகளுக்கிடையே வர்த்தகப்போர் மூண்டது.
இதில் தீர்வு காண்பதற்காக, இரு நாடுகளும் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் பேச்சு நடத்தின. சீன பொருட்களுக்கான வரி, 30 சதவீதமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக நேற்று டிரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு வரும், நவ., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சீனப் பொருட்களுக்கான வரி விதிப்பு ஏற்கனவே உள்ள 30 சதவீதத்துடன், தற்போதைய 100 சதவீதத்தையும் சேர்த்து 130 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இம்மாத இறுதியில் அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஷீ ஜின்பிங், ஆசிய நாடான தென்கொரியாவில் நடைபெற உள்ள ஆசியா - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் சந்திக்க திட்டமிடிருந்தனர். தற்போது, அந்த சந்திப்புக்கு அவசியம் ஏற்படவில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
காரணம் என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீனா மீது திடீரென கூடுதலாக 100 சதவீதம் வரி விதித்ததற்கு முதன்மையான காரணம், அரிய மண் தாதுக்கள் மீதான சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளின் விரிவாக்கம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே, கடந்த ஏப்ரலில், ஏழு அரிய மண் தாதுக்கள் ஏற்றுமதி மீது கடுமையான கட்டுப் பாடுகளை விதித்திருந்த சீனா, தற்போது மேலும் ஐந்து கூடுதல் தனிமங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதனால், மொபைல் போன்கள், மின்சார வாகன மோட்டார்கள் மற்றும் ராணுவ உபகரணங்களில் பயன்படுத்தப்படும் காந்தங்களுக்கு தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய தொழில் துறைகள் முடங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மூலப்பொருட்களுக்கு மட்டுமின்றி அவற்றை செயலாக்குவதற்கான தொழில்நுட்பத்தையும், அவற்றின் இறுதி பயன்பாட்டையும் சீனா கட்டுப்படுத்த முயல்வதாக கூறப்படுகிறது. இதையடுத்தே, கூடுதல் வரி விதிப்பு என்ற ஆயுதத்தை அமெரிக்கா கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.