சீனாவுக்கான வரி உயர்வை 90 நாட்களுக்கு நிறுத்தி அமெரிக்க அதிபர் 'சலுகை'
சீனாவுக்கான வரி உயர்வை 90 நாட்களுக்கு நிறுத்தி அமெரிக்க அதிபர் 'சலுகை'
ADDED : ஆக 13, 2025 07:02 AM

வாஷிங்டன்: சீ னாவுக்கு பரஸ்பர வரி கொள்கையின்படி, 145 சதவீதம் வரி அறிவித்திருந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அதை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டுடன் வர்த்தக பற்றாக்குறை வைத்துள்ள நாடுகளுக்கு அதிக வரி விதிப்பதை, சில மாதங்களுக்கு முன் நடைமுறைப்படுத்தினார். இதில் சீனாவுக்கான வரி படிப்படியாக உயர்த்தப்பட்டு, 145 சதவீதம் ஆனது. பதிலுக்கு, அமெரிக்க பொருட்களுக்கு சீனா 125 சதவீத வரி விதித்தது.
இதையடுத்து கடந்த மே மாதம், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இருதரப்பினரும் சந்தித்து பேசினர்.
அப்போது, பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்பின் கடந்த ஜூலையில், நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
தற்போது சீன பொருட்களுக்கு அமெரிக்காவில் 30 சதவீத வரியும், அமெரிக்க பொருட்களுக்கு சீனாவில் 10 சதவீத வரியும் அமலில் உள்ளன. இதே வரி நீடிக்குமா என நேற்று முன்தினம் அதிபர் டிரம்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர், 'சீனா நல்ல முறையில் பேச்சு நடத்தி வருகிறது. எனக்கும் சீன அதிபர் ஷீ ஜின்பிங்கிற்குமான உறவு சிறப்பான முறையில் உள்ளது' என்றார்.
இந்நிலையில், சீனாவுக்கான வரியை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவில், அதிபர் டிரம்ப் நேற்று கையெழுத்திட்டார்.