தேடப்பட்டு வந்த பயங்கரவாதி மசூத் அசார்: கார் வெடித்து பலி?
தேடப்பட்டு வந்த பயங்கரவாதி மசூத் அசார்: கார் வெடித்து பலி?
ADDED : ஜன 01, 2024 04:24 PM

பவல்பூர்: ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மவுலானா மசூத் அசார், வெடிகுண்டு தாக்குதலில் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் மற்றும் 2019ம் ஆண்டு பிப்.,14ல் நடந்த புல்வாமா தாக்குதல் ஆகியவற்றில் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தானில் பதுங்கி இருந்தார். கடந்த மே 1ல் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் இவரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.
இந்நிலையில், பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்த விவகாரத்தில், எப்.ஏ.டி.எப்., எனப்படும், நிதி சார்ந்த அதிரடி நடவடிக்கை அமைப்பு, பாகிஸ்தானை கருப்பு பட்டியலில் சேர்த்தது.
சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மசூத் அசார், இன்று (ஜன.,1) காலையில் கார் வெடித்ததில் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் பவல்பூர் மசூதியிலிருந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் மசூத் அசார் காரில் திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அப்போது கார் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது.
இதில் மவுலானா மசூத் அசார் உள்ளிட்ட அனைவரும் உடல் சிதறி பலியானதாகவும், இதனையடுத்து அங்கு சென்ற பாகிஸ்தான் போலீசார், அப்பகுதியை சீல் வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.