நச்சு நிறைந்தது 'எக்ஸ் ' தளம்: வெளியேறுகிறது பிரிட்டன் நாளிதழ்
நச்சு நிறைந்தது 'எக்ஸ் ' தளம்: வெளியேறுகிறது பிரிட்டன் நாளிதழ்
ADDED : நவ 13, 2024 09:31 PM

லண்டன்: எலான் மஸ்க்கின் 'எக்ஸ்' சமூக வலைதளம் நச்சு நிறைந்தது எனக் குற்றம் சாட்டிய பிரிட்டனைச் சேர்ந்த மிகப்பழமையான நாளிதழான ' தி கார்டியன் ' அந்த தளத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து உள்ளது.
பிரிட்டனின் மிகப் பழமையான நாளிதழ் தி கார்டியன். 1821 ல் மான்செஸ்டர் நகரில் துவங்கப்பட்டது. முதலில் ' தி மான்செஸ்டர் கார்டியன்' என்ற பெயரில் வெளியான நாளிதழ், 1959 ல் ' தி கார்டியன்' என பெயர் மாற்றம் செய்து தலைமையகம் லண்டனுக்கு மாற்றப்பட்டது. இதன் துணை நிறுவனமாக 'தி அப்சர்வர்' மற்றும் 'தி கார்டியன் வீக்லி' ஆகியன வெளியாகின்றன. இவை அனைத்தையும் 'தி கார்டியன்' மீடியா நிறுவனம் நிர்வகித்து வருகிறது.
இந்த நாளிதழுக்கு 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் 80 கணக்குகள் உள்ளன. இவற்றை 27 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சமூக வலைதளத்தில் இருந்து வெளியேறுவதாக அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது: எங்களின் செய்தி இனிமேல் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் வெளியாகாது. இந்த தளத்தை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை விட எதிர்மறைகள் அதிகமாக உள்ளது. இந்த தளத்தில் உள்ள தகவல்கள் வலதுசாரி சிந்தனையையும் இனவெறி கோட்பாடுகளை கொண்டதாக உள்ளது. அமெரிக்க தேர்தலை இந்த தளம் கையாண்ட விதம் அதனை உறுதிப்படுத்துகிறது.
எக்ஸ் என்பது நச்சு நிறைந்த மீடியா தளம். அதன் உரிமையாளர் எலான் மஸ்க் இதன் செல்வாக்கை பயன்படுத்தி அரசியல் களத்தை வடிவமைக்கிறார் என்ற எங்களின் கோட்பாட்டை அமெரிக்க தேர்தல் பிரசாரம் அடிக்கோடிட்டு காட்டுகிறது. செய்தி நிறுவனங்களுக்கு சமூக ஊடகம் என்பது மிகவும் முக்கியமானது. புதிய வாசகர்களை சென்றடைய அது உதவுகிறது. ஆனால், எங்கள் வேலைகளை குறைத்து மதிப்பிடுவது போல் 'எக்ஸ்' தளம் உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
எக்ஸ் தளத்தின் உரிமையாளர் ஆன எலான் மஸ்க், அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர். டிரம்ப் பிரசாரத்திற்கு நன்கொடைகளை வாரி வழங்கியதுடன், அவருக்கு ஆதரவாக பிரசாரமும் மேற்கொண்டார். இதற்கு பலனாக அமெரிக்க அரசின் திறன் துறைக்கு எலான் மஸ்க்கும், விவேக் ராமசாமியும் தலைமை வகிப்பார்கள் என டிரம்ப் அறிவித்து உள்ளார்.