/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
சுப சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை
/
சுப சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆடிக் கிருத்திகை
ஆக 01, 2024

ஆடிக் கிருத்திகை முருகனுக்கு உகந்த நாளாகும்.முருகன் குடிகொண்டுள்ள தலங்கள் தோறும் கோலாகலமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
தலைநகரில் மயூர்விகார் சுப சித்தி விநாயகர் ஆலயத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருத்திகை முதல் நாள் கிருஷ்ண மூர்த்தி மாமா தலைமையில் நாமாவளி பஜன் நடைபெற்றது. கிருத்திகை காலை சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெற்றன. மாலையில் தலைநகர் திருப்புகழ் அன்பர்களின் திருப்புகழ் பஜனை நடைபெற்றது. தொடர்ந்து முருகனுக்கு புஷ்பாபிஷேகம் மகா ஆரத்தி நடைபெற்றது.
ஆடிக் கிருத்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை' என்பது ஆன்றோர் வாக்கு. ஆடிக் கார்த்திகை நட்சத்திர நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஸித்திக்கும் என்கின்றனர் அடியார்கள்.
கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரங்கள் இணைந்த கூட்டத்தின் பெயர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றைத் வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அதனால் முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களைத் தன் தாயினும் மேலாகப் போற்றுவார். கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.
மேலும் கிருத்திகை நட்சத்திரம் என்பது சூரியபகவானுக்குரிய நட்சத்திரம். சூரியனே ஆரோக்கியத்துக்கு அதிபதி. எனவே, கிருத்திகை நட்சத்திர நாளில் முருக வழிபாடு செய்வதன் மூலம் நீடித்த ஆயுளையும் ஆரோக்கியத்தையும் பெறலாம்.
வழக்கமாக இந்த நன்நாளில் முருகப்பெருமானின் ஆலயங்கள் தோறும் களைகட்டும். பால்குடங்களும் காவடிகளும் நிறைந்து காணப்படும்.பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற முருகன் சந்நிதி நோக்கி அலை அலையாய் செல்வதை காணமுடியும். கோவில்களில் சிறப்பு அபிஷேகம் வழிபாடு அலங்காரங்கள் பக்தர்களுக்கு தெய்வீக விருந்து.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி