/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
அபிராமியின் மிருதங்க அரங்கேற்றம்
/
அபிராமியின் மிருதங்க அரங்கேற்றம்

தில்லி லோதி ரோடு லோக் கலா மன்ச் வாசுகி அரங்கில் ஆர்.அபிராமியின் 'மிருதங்க அரங்கேற்றம்' மிகச்சிறப்பாக நடந்தது. இவர் நாடாளுமன்ற மக்களவையில் உரை மொழிபெயர்ப்பு துறையில் இணை இயக்குநராக உள்ள இரா. இராஜ்குமார் பாலா-- P வனிதா தம்பதியின் மகளும் தாளமணி குரு P வெற்றிபூபதியின் மாணவியும் ஆவார். தில்லியில் 'CCRT உதவித்தொகை பெற்ற முதல் பெண் மிருதங்க மாணவி ஆர்.அபிராமி என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணைப்பிரிவு தலைவர் Sr. SP இலக்கியா கருணாகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அரங்கேற்றம் வரை ஊக்கப்படுத்தியதற்காக அபிராமியின் பெற்றோரை மனதாரப் பாராட்டினார். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள CCRT-யின் துணை இயக்குநர், டாக்டர் ராகுல் குமார் அபிராமி மிகச்சிறப்பாகத் தேர்ந்த கலைஞர் போன்று வாசித்ததாகச் சொன்னார். எட்ட வேண்டிய உயரங்கள் இன்னும் அதிகம் இருப்பதாகச் சொன்னார்.
அபிராமியின் மிருதங்க அரங்கேற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீராக் பாட, அரவிந்த் நாராயணன் வயலினிலும், ஆர். அபிராமி மிருதங்கத்திலும் வருண் இராஜசேகரன் கடத்திலும் எம். ஸ்ரீராம் கஞ்சிராவிலும் துணை நின்றனர்.
விறுவிறுப்பான ஆபோகி வர்ணத்தை தொடர்ந்து முக்கண்ணன் மைந்தனை மூலாதாரனை வாதாபி கணபதியில் வணங்கி தொடர்ந்தார். அடுத்து கேட்க கிடைத்தது சோபில்லு சப்த ஸ்வர(ஜகன்மோகினி) அவையோரை ரசிக்க வைத்தார். ரகுவம்ச சுதா கதனகுதூகலத்தில் ஸ்ரீ ராகின் பாட்டும் சுகம் அபிராமியின் வாசிப்பு இதம்.
அன்றைய கச்சேரியின் முக்கிய பாடலாக எல்லோருக்கும் பரிச்சயமான நகுமோமு கனலேனி..( ஆபேரி) தொடங்கியதும் அவையோர் தாளமிட்டு ரசிக்க ஆரம்பித்து விட்டனர். மிருதங்கத்தில் அபிராமியின் நேர்த்தியான வாசிப்பு, சுத்தமான சங்கீதம், இணையான வயலின், கடம், கஞ்சிரா ரசிகர்களுக்கு நல்ல விருந்து .
தனி ஆவர்த்தனத்தில் அபிராமி ஒரு தேர்ந்த வித்தகியாய் சக கலைஞர்களுடன் இணைந்து வாசித்தது அருமை. அரங்கத்தில் இருந்தவர்களுக்கு கண்ணிற்கும் காதிற்கும் நல்லதொரு இசை அனுபவம். இறுதியாக தனஸ்ரீ தில்லானா, மங்களம் வாசித்து நிறைவு செய்தார்.
கலைஞர்களையும் குருவையும் பெற்றோர் கெளரவித்தனர். விழாவில் அபிராமிக்கு “அரங்கேற்ற நாயகி” என்னும் விருதும் வழங்கப்பட்டது.
வந்து குவிந்த வாழ்த்துரைகளில், ”அபிராமியின் மிருதங்க இசை எட்டுத் திசைகளிலும் உள்ள காற்றைத் தொட்டுச் சொல்லட்டும். இது தசை மூடிய விரல் அல்ல; இசை கூடிய குரல்” எனும் கவிஞர் நெல்லை ஜெயந்தாவின் கவி வரிகள் பெரிதும் ரசிக்கப்பட்டன.
இந்த விழாவில் ருத்ராக்ஷம்-2025 விருதுகள் வழங்கப்பட்டன. மிருதங்க வித்வான் முருகபூபதி விருது இசை இயக்குநர் காஜல் கோஷுக்கும், புல்லாங்குழல் இசை வித்தகி நவநீதம் அம்மாள் விருது வீணைக் கலைஞர் எஸ். இராதாகிருஷ்ணனுக்கும், மகாகவி பாரதி விருது தில்லித் தமிழ்ச் சங்க முன்னாள் செயலர் என். கண்ணனுக்கும் வழங்கப்பட்டன. விருதாளர்கள் ஏற்புரை வழங்கினர்.
தில்லித் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் இராகவன் நாயுடு, பொருளாளர் அருணாச்சலம், இணைச் செயலர் உமா சத்தியமூர்த்தி, தில்லித் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் இந்துபாலா, பண்டிட் சேத்தன் ஜோஷி, சிந்துக்கவி சேதுராமலிங்கம், கூச்சிப்புடி குரு நாகஜோதி, பத்திரிக்கையாளர்கள் சக்தி கந்தசாமி, சுந்தரேஸ்வரன், ஹயக்ரீவா அமைப்பின் குருச்சரண், அகில இந்திய வானொலியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர்கள் புவனேஸ்வரி ஸ்ரீராம், சுஜாதா ரமணன், மணியம், வேணி, ஹரிஹரன், ஸ்ரீமதி ரவிச்சந்தர், சீனிவாசன் கணேசன், வித்யா, லக்ஷ்மணக்குமார், நிவாஸ், மக்களவைச் செயலக அதிகாரிகள் நஃபீஸ் அஹமது, பாபேஷ் ஷர்மா, IAVNS மூர்த்தி, இந்தியன் ரயில்வே அதிகாரி கவிஞர் முரளீதரன், கவிதாயினி ஜோதி பெருமாள், சத்யா அசோகன், தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், அஞ்சல்துறை அதிகாரிகள், தமிழ்ச் சங்க நிர்வாகி மற்றும் ஊழியர்கள், உள்ளிட்ட பலர் திரளாகக் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் செயலர் இரா.முகுந்தன், கர்நாடக சங்கீத சபையின் பொதுச்செயலர் ஆர். மகாதேவன், புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதினத்தின் தவத்திரு தயானந்த சந்திரசேகர சுவாமிகள், தில்லிக்கம்பன் கழக தலைவர் KVK பெருமாள், மாலதி தமிழ்ச்செல்வன், ஆகியோருடைய வாழ்த்துரைகளும் முனைவர் கவிஞர் புதேரி தானப்பன் அனுப்பிய கவிதையும் வாசிக்கப்பட்டன.
விழாவை பிரியா விஸ்வநாதன் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு அபிராமியின் தந்தை கவிஞர் இரா. இராஜ்குமார் பாலா நன்றி தெரிவித்தார்.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி
