
தில்லி தியாகராஜர் நகர் ஜெகன்னாத் மார்க்கில் அமைந்துள்ள ஜெகந்நாத் மந்திரில் ரத உற்சவ சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புரி ஜெகந்நாதர் ஆலய திருவிழாவின் முக்கிய அம்சம் தேரோட்டம் தில்லியில் இந்த வைபவம் நிலாதிரி மகோற்சவம் என்ற பெயரில் 58 வது வருடமாக கொண்டாடப்பட்டது. ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ்பெற்றது.
எப்படி கந்த ஷஷ்டி வைகுண்ட ஏகாதசி என பல விழாக்கள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறதோ அதே போன்று ஜெகந்நாதரின் ரத உற்சவம் அன்பர்களால் அவரவர் வசிக்கும் ஊர்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தில்லி நிலாதிரி 2025 விழாவின் அங்கமாக கலைநிகழ்ச்சிகள் பலவும் தியாகராஜர் அரங்கில் நடைபெற்றது. அதில் சுராமையா நடன பள்ளி சார்பில் குச்சுப்புடி நடன நிகழ்ச்சி அனைவரின் பாராட்டையும் பெற்றது.
ரத யாத்திரையின் முன்னதாக நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பாவனா, ஆனந்த், மான்சி, மானசா சாய் ஷா உஜ்ஜயினி ஆகியோர் பங்கேற்றனர். முதலில் மகாவிஷ்ணுவின் தசாவதாரம் மிக அழகாக அரங்கேறியது. தொடர்ந்து துர்க்கையின் வீரம், வேகம், ஆளுமைமிக்க திரிலோக ரக்க்ஷணி நடனம் விறுவிறுப்பாகவும் பார்வையாளர்களை கவரும் வண்ணம் இருந்தது. இறுதியாக ராகம் தனஸ்ரீ யில் அமைந்த தில்லானாவை குச்சிப்புடியின் அம்சமான கலசத்தில் ஏறி ஆடியது சிறப்பு. கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் சபையோர் பாராட்டும் வண்ணம் சுராமையா நடன மணிகள் ஆடினர். இந்த பாடல்களின் நடன கோர்வை அனைத்தும் குரு மீனு தாக்கூர் வடிவமைத்தது குறிப்பிடத்தக்கது.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி