/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
ஐஸ்வர்ய மகா கணபதி ஆலயத்தில் ஆறாம் நாள் நவராத்திரி விழா
/
ஐஸ்வர்ய மகா கணபதி ஆலயத்தில் ஆறாம் நாள் நவராத்திரி விழா
ஐஸ்வர்ய மகா கணபதி ஆலயத்தில் ஆறாம் நாள் நவராத்திரி விழா
ஐஸ்வர்ய மகா கணபதி ஆலயத்தில் ஆறாம் நாள் நவராத்திரி விழா
செப் 30, 2025

ஐஸ்வர்ய மகா கணபதி ஆலயத்தில் ஆறாம் நாள் நவராத்திரி விழா---------------புது டில்லி கேசவபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஐஸ்வர்ய மகாகணபதி ஆலயத்தில் நவராத்திரி ஆறாம் நாள் விழா சனிக்கிழமையன்று நடைபெற்றது.
ஆஸ்திக சமாஜமும், ரசிகப்ரியா அமைப்பும் இணைந்து நடத்திய இவ்விழாவில் சென்னை பி.கோவிந்தராஜன், சூர்யா ஸ்ரீராம் ஆகியோரின் கர்நாடக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ராகவேந்திர பிரசாத் வயலினும், மனோகர் பாலச்சந்திரன் மிருதங்கமும் வாசித்தனர்.
டில்லி தமிழ் சங்கத்தின் தலைவர் சக்தி பெருமாள், பொதுச் செயலாளர் இரா. முகுந்தன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
விழா நிறைவில் தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனர் - தலைவர் கே வி கே பெருமாள் கலைஞர்களுக்குப் பொன்னாடை அணிவித்துக் கவுரவித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில், 'இந்து மதத்தின் பெரும்பாலான பண்டிகைகள் கொண்டாடப்படுவதற்கு அறிவியல் மற்றும் தத்துவார்த்தமான காரணங்கள் உண்டு. இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் புராணக் கதைகளை ஏற்றுக் கொள்வதில்லை. எருமை தலை கொண்ட மகிஷாசுரனை துர்கா தேவி போரிட்டு அழித்ததாகப் புராணம் சொல்லுகிறது. இதைச் சொல்லும் போது மனிதனுக்கு எருமைத் தலை இருப்பது சாத்தியமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், இதற்குப் பின்னால் ஒரு தத்துவம் இருக்கிறது. எருமையைப் போல் நம்மிடம் இருக்கும் சோம்பல் குணத்தை, நமது மன உறுதியின் மூலமாக அழிக்க வேண்டும் என்பதுதான் இந்தப் புராணக் கதையில் மறைந்திருக்கும் தத்துவம். வீட்டில் குழந்தைகளிடம் இது போன்ற தத்துவங்களை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும்' என்றார்.
ஆஸ்திக சமாஜத்தின் தலைவர் டி. என். சிவராமகிருஷ்ணன், ரசிகப்ரியா அமைப்பின் தலைவர் டி. வி. மணிகண்டன் ஆகியோர் விழா ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
--புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.
