/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
'நொய்டா கோவிலில்' தமிழ் நாடு கலாசாரம்
/
'நொய்டா கோவிலில்' தமிழ் நாடு கலாசாரம்
செப் 29, 2025

'நொய்டா கோவிலில்' தமிழ்நாடு கலாசாரம் நொய்டா செக்டர் 62ல் உள்ள ஸ்ரீ கார்த்திகேயா கோயில் வளாகத்தில் வேத மந்திரங்களுடன் பத்து நாட்கள் திருவிழாவினை கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் பல்வேறு கலாச்சார நிகழ்வுகளுடன், லலிதா ஸஹஸ்ரநாம மண்டலியினர் தேவி மகாத்மிய பாராயணம், மற்றும் லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தனர். முடிவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.
இந்த பத்து நாட்கள் திருவிழாவின் சிறப்பம்சம் 'கொலு'. அடுத்த தலைமுறையினரும் நமது தென்னிந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு 7 படிகளுடன் பிரம்மாண்டமாக கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளாக இந்த 'கொலு' தொடர்ந்து வைக்கப்படுகிறது. மூன்று முறை பரிசு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று புது டில்லி அமைப்புகள் : ஷண்முகானந்தா சங்கீத சபா (75 வது ஆண்டு ), ராமகிருஷ்ணபுரம் தென்னிந்திய சொசைட்டி (60 வது ஆண்டு) மற்றும் ஸ்ரீ ஹயக்ரீவ (14வது ஆண்டு) ஆகியவை இணைந்து பல்வேறு நடனம், இசை நிகழ்ச்சிகள் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது . டாக்டர் சுஷிலா விஸ்வநாதனின் 'கமலாம்பா நவாவர்ணம்', ருக்மணி மற்றும் குழுவினர் 'கோலாட்டம்', குமாரி காவ்யா, குமாரி இலக்கியாவின் பரதநாட்டியம் நடனம், மற்றும் டாக்டர் பிரசாந்த் கோபிநாத பாய், ஸ்ரீஹரி, ஷ்ருதி ராமன் வழங்கிய கர்நாடக இசை 'ஆராதனை', கோவில் வளாகத்தில் நடந்தது.
நமது தமிழ் நாட்டு கோவில்களில் நடப்பது போலவே நொய்டா கோவிலிலும் ஏற்பாடு செய்ததற்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தார்கள். நவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கைக்கும், ஸ்ரீ திரிபுர சுந்தரி அம்மனுக்கு வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டது. ஸ்ரீ துர்க்கைக்கு இவ்வருடம் முதல் முறையாக வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் இந்த வருடமும் சண்டி ஹோமம் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்தது. சுமங்கலி, தம்பதி, ப்ரஹ்மச்சாரி, மற்றும் கன்யா பூஜைகள் நடந்தன. இதே போல் செக்டர் 22 ல் இருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவிலிலும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் மற்றும் துர்கைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. தீபாராதனை முடிந்தவுடன் பிரசாதம் விநியோகம் செய்தனர் .
நொய்டாவின் பல்வேறு செக்டர்களினிருந்தும் மற்றும், இந்திராபுரம், வைஷாலி, காசியாபாத், கிரேட்டர் நொய்டா, குருகிராம் ஆகிய இடங்களில் இருந்து இந்த நிகழ்ச்சிகளை காண வந்திருந்தார்கள்.
ஒத்த எண்ணம் கொண்ட தென்னிந்திய மக்களால் தொடங்கப்பட்ட வேதிக் பிரசார் சன்ஸ்தான் , கடந்த நாற்பது ஆண்டுகளாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறது. இந்த சன்ஸ்தான் செக்டர் 22 இல் உள்ள ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோயில், ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டர் 62, நொய்டா, இரண்டு கோவில்களையும் நிர்வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது . - நொய்டாவில் இருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்