
கர்நாடகாவின் பல கிராமங்களில், இன்றைக்கும் சில பாரம்பரிய விளையாட்டுகள் நிலைத்து நிற்கின்றன. இவற்றில் கம்பம் ஏறும் சாகச விளையாட்டும் ஒன்றாகும். வட மாவட்டங்களில், 'மல்ல கம்பா' மிகவும் பிரபலம்.
சாகச பயிற்சி
மைதானத்தில் 20 அடி உயரமான கம்பம் நடப்படும். முதலில் சிறுவரோ அல்லது சிறுமியரோ சரசரவென கம்பத்தின் உச்சிக்கு செல்வர். அவரை தொடர்ந்து மற்ற சிறுமியர் கயிற்றின் உதவியால், கம்பத்தின் இரண்டு பக்கங்களிலும் கண்ணை மூடி திறப்பதற்குள் ஏறி நின்று, பல விதமான யோகாசனங்கள் செய்து அசத்துவதே, மல்ல கம்பா சாகச விளையாட்டாகும். பாகல்கோட் தாலுகாவின், துளசிகேரி கிராமத்தில் கம்பம் ஏறும் சாகச விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதை, 'மல்ல கம்பா' என, அழைக்கின்றனர். தினமும் காலை 6:00 மணிக்கு பள்ளி மைதானத்தில் இந்த சாகச பயிற்சி நடக்கிறது. இதை பார்க்க ஊரே கூடுகிறது. இதில் பல மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.
கம்பத்தின் மீதேறி சாகசங்கள் செய்து காண்பிக்கின்றனர். அவர்கள் தவறி கீழே விழுந்தாலும் அடிபடுவதை தடுக்க, மெத்தைகள் போடப்பட்டிருந்தன. சிறுவர்கள் கம்பத்தில் ஏறி யோகாசனம் செய்ததை, பெற்றோர் நடுங்கும் இதயத்துடன் பார்த்தனர். பிள்ளைகள் தவறி கீழே விழுந்து விடுவரோ என்ற அச்சம், பெற்றோரின் முகத்தில் தெரிந்தது.
தரையில் யோகாசனம் செய்வதே, மிகவும் கஷ்டமாகும். ஆனால், சிறுவர்கள் கயிற்றை பிடித்தபடி, யோகா செய்து அனைவரையும் வியப்படைய வைத்தனர். கூடியிருந்தவர்கள் உற்சாகத்துடன் கைதட்டியும், விசில் அடித்தும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தினர்.
பெற்றோர் தயக்கம்
சிறுவர்கள் என்ற பயமும் இல்லாமல், கம்பத்தில் சாகசங்களை செய்து அசத்தினர். இது அபாயமான விளையாட்டு என்பதால், இதில் தங்களின் பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் தயங்குவர். ஆனால் துளசிகேரி கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும், கம்பம் ஏறும் சாகச விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.
குஸ்தி, கபடி, சைக்கிளிங் போன்று, கம்பம் ஏறுதல் விளையாட்டிலும், சிறார்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஹாவேரி மாவட்டத்தின், லட்சுமேஸ்வராவில் கல்லுாரி ஒன்றில், உடற் பயிற்சி ஆசிரியராக இருந்த சென்னப்பா சன்னாளா, 2003ல் துளசிகேரி கிராமத்தின் அரசு உயர்நிலை பள்ளிக்கு உடற்பயிற்சி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 2004ல் அவரது முயற்சியால் துவக்கப்பட்ட இந்த சாகச விளையாட்டு, இன்று நாடு முழுதும் பரவியுள்ளது.
வேலை வாய்ப்பு
கிராமத்தின் மாருதி பாரகேரா என்பவர், தேசிய அளவில் ஆறு முறை முதல் பரிசு பெற்றுள்ளார். சுரேஷ் லாயண்ணவரா, விஜய் சிரபூரா, உட்பட 80 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் இங்குள்ளனர். இவர்களும் தேசிய அளவில் சாதனை செய்துள்ளனர். அதே போன்று அனுபமா கெரகலமட்டி, ரூபா, தீபா என, பல பெண் விளையாட்டு வீரர்களும் பதக்கங்கள் பெற்றனர்.
கிராமத்தில் பயிற்சி பெற்ற பலரும், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பயிற்சியாளராக உள்ளனர். ஆசிரியர் சென்னப்பா சன்னாளா கொண்டு வந்த சாகச விளையாட்டு, இன்று ஆலமரமாக வளர்ந்துள்ளது. அவரது வழிகாட்டுதலில் கலையை கற்றுக்கொண்ட பலருக்கும், இக்கலை வேலை வாய்ப்பை அளித்துள்ளது.
நாட்டின் எந்த இடத்தில் இந்த சாகச விளையாட்டு போட்டிகள் நடந்தால், அதில் துளசிகேரி கிராமத்தின் சிறுவர்கள் இருப்பர்; பதக்கங்களுடன் ஊர் திரும்புவர்.
- நமது நிருபர்

