ADDED : நவ 28, 2025 05:38 AM

இன்றைய காலத்தில் சைக்கிள் ஓட்டுவது அபூர்வம். ஸ்கூட்டர், பைக்குகளில் பறக்கின்றனர். சைக்கிள் மிதிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இது குறித்து, பல தன்னார்வ அமைப்புகள், சிறாருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன. சைக்கிள் ஓட்டும் போட்டி நடத்தி, சிறார்களை ஊக்கப்படுத்துகின்றனர்.
மைசூரு நகரின் மானசங்கோத்ரியில் நேற்று முன்தினம் சைக்கிள் ஓட்டும் போட்டி நடந்தது. மைசூரு பல்கலைக்கழக உடற் பயிற்சி பிரிவு, மாவட்ட சைக்கிளிங் அசோசியேஷன், பீனிக்ஸ் இன்டர்நேஷனல் அகாடமி உட்பட, பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைப்பில், போட்டி நடந்தது.
போட்டியில் 150 சிறார் பங்கேற்றனர். தங்களின் சிறிய சைக்கிளில், தலையில் ஹெல்மெட் அணிந்து, போட்டியில் இறங்கியது அனைவரையும் கவர்ந்தது. மைசூரு பா.ஜ., - எம்.பி., யதுவீர் கொடி அசைத்து போட்டியை துவக்கி வைத்தார். சிறார்கள் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போன்று, நான், நீ என, போட்டி போட்டுக்கொண்டு சைக்கிள் ஓட்டி, இலக்கை எட்டினர். சிறாரின் வயது அடிப்படையில், நான்கு பிரிவுகளில் போட்டி நடந்தது. சிறார்கள் ஆர்வத்துடன் போட்டியில் பங்கேற்றனர்.
சிறுவர் பிரிவில் ஸ்தந்தா கவுஷிக் முதலிடம், ஆர்யன் சூர்யா இரண்டாவது இடம், சையத் ஜூஹாருதீன் மூன்றாவது இடம் பெற்றனர். அதே போன்று சிறுமியர் பிரிவில், லஹரி பூவய்யா முதலிடம், குஷி சேத்தன் இரண்டாவது இடம், ஆன்யா லோகேஷ் மூன்றாவது இடமும் பெற்றனர். இவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது
- நமது நிருபர் - .

