ADDED : அக் 02, 2025 11:09 PM

பொதுவாக திருமணமாகி குழந்தை பிறந்து விட்டால் பெண்களுக்கு, விளையாட்டில் ஆர்வம் குறைந்து விடும். தங்களின் திறமைகளை மூட்டை கட்டி, பரணில் போட்டு விடுவர். இதற்கு விதி விலக்காக சில பெண்கள் இருப்பர். இவர்களில் பிரதிபாவும் ஒருவர்.
மைசூரு நகரில் வசிப்பவர் பிரதிபா கவுதம், 34. இவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் சிறந்த நீச்சல் வீராங்கனை. இவருக்கு சிறு வயதில் நீச்சல் மீது ஆர்வம் இருந்தாலும், திறமையை காட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை. குழந்தைகள் பிறந்த பின், 2024ல் தன் நீச்சல் பயணத்தை துவக்கினார்.
திடமான மனதுடன் கடுமையான பயிற்சி பெற்றார். அதற்காக, குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகவில்லை. குடும்பம், நீச்சல் பயிற்சி என, இரண்டுக்கும் முக்கியத்துவம் அளித்தார். தாமதமாக பயிற்சியை துவங்கினாலும், இலக்கை எட்டி சாதனை செய்துள்ளார்.
நடப்பாண்டு ஜூனில், மைசூரு பல்கலைக்கழகத்தின் நீச்சல் குளத்தில், மாநில அளவிலான போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதில் பிரதிபா கவுதம் பங்கேற்று, இரண்டு பிரிவுகளில் திறமையை காட்டி, இரண்டிலும் தங்கப்பதக்கங்கள் வென்று அசத்தினார்.
தற்போது பிரதிபா கவுதம், சாமுண்டி விஹார் நீச்சல் குளத்தில், மூத்த பயிற்சியாளர் மனோஜ்குமார் மற்றும் உதவி பயிற்சியாளர் சந்தோஷிடம் பயிற்சி பெறுகிறார். பிரதிபாவின் சாதனைக்கு, அவரது கணவர் கவுதம் மற்றும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பும், ஆதரவும் முக்கிய காரணமாக உள்ளது.
கர்நாடக நீச்சல் சங்கம் சார்பில், அக்டோபரில் மாநில அளவிலான நீச்சல் போட்டி பெங்களூரில் நடக்கவுள்ளது. அதில் பங்கேற்க பிரதிபா கவுதம், தன்னை தயார்படுத்துகிறார். சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வது, அவரது விருப்பமாகும்.
விடா முயற்சியுடன் மன உறுதியும், ஆர்வமும் இருந்தால் சாதனை செய்ய வயது, பொறுப்புகள் அல்லது நேரம் பற்றாக்குறை என, எதுவும் தடையாக இருக்காது என்பதற்கு, பிரதிபா கவுதமின் சாதனைகளே சிறந்த எடுத்துக்காட்டு. குடும்ப தலைவிகளாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார்
- நமது நிருபர் - .